தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., கட்டுப்பாட்டில் வரும், பகல்நேர பராமரிப்பு
மையங்களுக்கு, ஏப்., 1ம் தேதி முதல், நிதி ஒதுக்கீடு செய்யாததால், இயலாக்
குழந்தைகள், மூன்று நேர உணவுக்கு வழியின்றி தவிக்கின்றன.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், பள்ளி செல்லும் வயதில் உள்ள இயலாக் குழந்தைகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, கல்வி கற்பிக்கப்படுகிறது. இவர்களுக்காக, பகல் நேர பராமரிப்பு மையங்கள் செயல்படுகின்றன.இயலாக் குழந்தைகள் இனம் காணப்பட்டு, அவர்களுக்கு ஏற்ற முறையில், இங்கு கல்வி அளிக்கப்படுகிறது. இப்பணிக் காக, ஒவ்வொரு ஒன்றியத்திலும், இரண்டு சிறப்பாசிரியர்கள், நான்கு தசை இயக்கப் பயிற்றுனர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். என்.ஜி.ஓ.,க்கள் மூலம், ஆண்டுதோறும் இயலாக் குழந் தைகளை இனம் காண இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன; பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.பகல் நேர பராமரிப்பு மையங்கள் செயல்பாட்டுக்காக, எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆண்டுதோறும், நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில், ஆசிரியர்கள் சம்பளம், மருத்துவ முகாம், உதவி உபகரணங்கள் வழங்கல், ஆதார அறைகள், சாய்தளம், கழிப்பிடம் அமைத்தல், விழிப் புணர்வு முகாம் நடத்த, இந்நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.ஒதுக்கீடு பெறப்பட்ட நிதி, தொண்டு நிறுவனங்கள் மூலம், சம்பந்தப்பட்ட பராமரிப்பு மையத்தில் முழுமையாக செலவிடப்படுகிறதா என்பதை, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், உறுதி செய்யவேண்டும்.
வாகன வசதி
தவிர, மையங்களுக்கு குழந்தைகளை அழைத்து வர, வாகன வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும். இல்லையேல், மையங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோருக்கு, பஸ் கட்டணம் கணக்கிடப்பட்டு, அந்த வாரம் அல்லது மாதக் கடைசியில் வழங்க வேண்டும்.மத்திய அரசு நிதியாக, 60 சதவீதம், மாநில அரசு நிதியாக, 40 சதவீதம் எஸ்.எஸ்.ஏ., மூலம், பராமரிப்பு மையத்துக்கு வழங்கப்படுகிறது. 20 குழந்தைகள் வரை உள்ள, ஒரு மையத்துக்கு மாதத்துக்கு, உணவு செலவுக்காக, 7,000 ரூபாயும், பெற்றோர் குழந்தைகளை அழைத்து வர, போக்குவரத்து செலவுக்காக, 4,500 ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சிக்கல்
ஆண்டுதோறும் முறையாக வந்து கொண்டிருந்த நிதி, கடந்த மார்ச், 31ம்தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதனால், இம்மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு, மூன்று நேர உணவு வழங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்காக, உணவு கொண்டு வந்து ஊட்டி விடுகின்றனர்.எஸ்.எஸ்.ஏ., அதிகாரி ஒருவர் கூறுகையில், "இரு அரசும், மார்ச் 31ம் தேதி முதல், நிதியை நிறுத்தி வைத்துள்ளன. சாதாரண குழந்தைகள் எனில் பரவாயில்லை என, விட்டு விடலாம். பரிதாபத்துக்கு உள்ளான குழந்தைகளின் பெற்றோர், அவர்களே உணவு கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். எப்போது நிதி வரும் என தெரியவில்லை' என்றார்.
No comments:
Post a Comment