இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக, ரத்தத்தில்
குளித்த ஒரு நிகழ்வு தான், 1919 ஏப்., 13ல் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில்,
"ஜாலியன்வாலா பாக்' எனும் திடலில், வெள்ளையர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி
சூடு.
என்ன காரணம்: நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி இயக்கம், சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் வலுப்பெற்றன. இது பேராபத்து எனக் கருதி, மக்களிடையே வளர்ந்து வந்த விடுதலை வேட்கையை அகற்ற, மக்களின் கருத்துரிமையை பறிக்கும் வகையில், 1919 மார்ச் 21ல் "ரவுலட் சட்டம்' என்ற கொடிய சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. "எது குற்றம்' என்பதை இச்சட்டம் வரையறுக்கவில்லை. "சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சுருக்கமான விசாரணை நடைபெறும். மேல்முறையீடுக்கு வழி இல்லை' போன்ற அதிகாரங்கள் இச்சட்டத்தில் இருந்தன. இது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
என்ன நடந்தது:
இச்சட்டத்தை எதிர்த்து, ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய காந்தியடிகள், 1919 ஏப்.,10ல் கைது செய்யப்பட்டார். சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாலியன்வாலா பாக் திடலில், கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இத்திடல், நான்கு பக்கம் மதில்களால் சூழப்பட்டு இருந்தது. வெளியே வர, ஒரே ஒரு குறுகிய வழி மட்டுமே இருந்தது. இக்கூட்டத்தைக் கண்டு கொதிப்படைந்த ஆங்கிலேய அரசு, ஜெனரல் டயர் தலைமையில் ஒரு படையை அங்கு அனுப்பியது. நாடு முழுவதும் மக்களிடம் பயத்தை ஏற்படுத்த எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டார் டயர். வெளியே செல்ல ஒரு வழி மட்டுமே இருந்ததால், மக்களால் தப்பிக்க முடியவில்லை. நெரிசலில் மிதிபட்டும், குண்டு பாய்ந்தும் மக்கள் பலியாகினர். பத்து நிமிடங்கள் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகினர் என சொல்லப்படுகிறது. ஆங்கிலேய அரசோ, 379 பேர் கொல்லப்பட்டனர். 2 ஆயிரம் பேர் காயமடைந்தனர் என தெரிவித்தது.
மன்னிப்பு :
இச்சம்பவம்
நடந்த 94 ஆண்டுகள் கழித்து, சமீபத்தில் இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர்
டேவிட் கேமரூன், ஜாலியன்வாலா பாக் நினைவிடத்திற்கு சென்றார். அப்போது பேசிய
அவர், "இச்சம்பவம், பிரிட்டன் வரலாற்றில் தலைகுனிவை ஏற்படுத்தியது. இதற்கு
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என, குறிப்பிட்டார். இந்த இடத்திற்கு வந்த
முதல் பிரிட்டன் பிரதமர் இவரே. இதற்கு முன், இங்கிலாந்து ராணி, இரண்டாம்
எலிசபெத், 1997ல் வந்திருந்தார்.
No comments:
Post a Comment