பொதுத் தேர்வு விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில்,
தபால்துறை தொடர்ந்து சொதப்பி வருவதால், பார்சல் லாரியில் விடைத்தாள்களை
அனுப்பும் திட்டத்திற்கு மாறுவது குறித்து, தேர்வுத்துறை இயக்குனரகம்,
தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு
வரும்போது, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், "டென்ஷன்' வருகிறதோ
இல்லையோ, தேர்வுத் துறைக்கு, தினம், தினம், "திக்...திக்...' நிலை தான்.
ஒவ்வொரு நாளும், பிரச்னை இல்லாமல் தேர்வு முடிய வேண்டும் என, பிரார்த்தனை
செய்யாதது மட்டும் தான் குறை. சிக்கலில் தேர்வுத்துறை: இருபது லட்சம்
மாணவர்களுக்கு, தேர்வை நடத்தி, தேர்வு முடிவை வெளியிடுவது,
தேர்வுத்துறைக்கு, பெரிய சவாலான வேலையாக உள்ளது. போதிய உள்கட்டமைப்பு
வசதிகள் இல்லாதது, நவீன வசதிகள் இல்லாதது, திட்டங்களில் புதுமையை
புகுத்தாதது போன்ற காரணங்களால், ஒவ்வொரு ஆண்டும், ஏதாவது சிக்கலில்
சிக்கிக்கொண்டு தவிப்பது, தேர்வுத்துறைக்கு வழக்கமாக உள்ளது.
1:
இந்த ஆண்டு, பிளஸ் 2 தமிழ் முதற்தாள் கேள்வித்தாளில், கடந்த ஆண்டு கேட்ட
கேள்விகளை, அப்படியே வரி மாறாமல் கேட்டதில் துவங்கிய குளறுபடி, தற்போது வரை
தொடர்ந்து கொண்டிருக்கிறது. 63 மதிப்பெண்களுக்கான கேள்விகள், அப்படியே,
"ரிப்பீட்' ஆகியிருந்தன. ஆனால், இதற்கு, தேர்வுத்துறை வாயே திறக்கவில்லை.
2:
பத்தாம் வகுப்பு தமிழ் முதற்தாளில், ஐந்து மதிப்பெண்களுக்கான விடைகளை
பூர்த்தி செய்ய, வங்கி செலானை வழங்காமல், பெரும் குளறுபடி செய்தது. 11
லட்சம் மாணவர்களுக்கும், வங்கி செலான்கள் வழங்கவில்லை. இதற்கு, ஐந்து
மதிப்பெண்கள் வழங்கிவிடுவோம் என, தெரிவித்து, பிரச்னையை முடித்துக்
கொண்டது.
3: கடலூர் மாவட்டத்தில் இருந்து, தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள் கட்டுகளை, விருத்தாசலம் ரயில் சந்திப்பில் இருந்து, திருச்சிக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததில், ஒரு விடைத்தாள் கட்டு, ரயிலில் இருந்து கீழே விழுந்து, 157 விடைத்தாள்கள் சின்னாபின்னமாகி, சேதம் அடைந்தன. இதற்கு, தபால் துறைதான் காரணம் என, ரயில்வே தெரிவித்துவிட்டது. 157 மாணவர்களுக்கும், தமிழ் முதற்தாள் மதிப்பெண்கள் வழங்கி விடுவோம் என, இந்த பிரச்னைக்கும், தேர்வுத்துறை முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
4:
விருத்தாசலம் சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து பெற்றோர்களும்,
மாணவர்களும் மீளாத நிலையில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், நேற்று
முன்தினம் அடுத்த குண்டு வெடித்துள்ளது. செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் அரசு
மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய, 221 மாணவர்களின் விடைத்தாள் கட்டுகள்,
அரசுப் பள்ளி, மெட்ரிகுலேஷன் என, இரு கட்டுகளாக பார்சல் செய்து, நாமக்கல்
விடைத்தாள் திருத்தும் மையத்திற்குச் செல்ல, தேர்வுத்துறை நடவடிக்கை
எடுத்தது.
டவுன் பஸ்சில் விடைத்தாள் பயணம்: திண்டிவனம்
ஆர்.எம்.எஸ்., அலுவலகத்திற்கு, டவுன் பஸ்சில் விடைத்தாள் கட்டுகளை
எடுத்துச்சென்ற தபால் ஊழியர், ஒரு விடைத்தாள் கட்டை தொலைத்துவிட்டார். இந்த
சம்பவம், மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுத்தேர்வில்
நடந்துவரும் தொடர் குளறுபடிகளால், தேர்வுத்துறை, நிலை குலைந்துபோய், திக்கு
முக்காடி வருகிறது. விருத்தாலம், செஞ்சி ஆகிய இரண்டு சம்பவங்களுக்கும்,
தபால் துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்றும், விடைத்தாள் கட்டுகளை சரிவர,
அவர்கள் கையாளவில்லை என்றும், தேர்வுத்துறை அதிருப்தி அடைந்துள்ளது. இதன்
காரணமாக, தபால் துறை மூலம், விடைத்தாள் கட்டுகளை அனுப்பும் திட்டத்தை
மூட்டை கட்டுவது குறித்து, தேர்வுத்துறை தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளது.
மாற்று திட்டம்:
சில ஆண்டுகளுக்கு முன், பார்சல் லாரி சர்வீஸ் மூலம், மாவட்ட வாரியாக,
விடைத்தாள் கட்டுகளை சேகரித்து, குறிப்பிட்ட விடைத்தாள் திருத்தும்
மையங்களில் ஒப்படைக்கும் திட்டம், சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில், எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. அதே நேரத்தில்,
விடைத்தாள்களை கையாளும் திட்டத்தில், தனியார் நிறுவனத்தை ஈடுபடுத்துவது,
இதற்கு, "ஆர்டர்' கேட்டு, பல்வேறு தனியார் நிறுவனங்கள், தேர்வுத்துறைக்கு
நெருக்கடி கொடுத்தது போன்ற காரணங்களால், அத்திட்டம் கைவிடப்பட்டதாக, துறை
வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது, இத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது
குறித்து, தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது.
நம்பிக்கைக்கு உரிய நிறுவனத்தை
தேர்வு செய்து, விடைத்தாள் கட்டுகளை கையாளும் வேலையை கொடுக்கலாமா என்பது
குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது. அதிகாரி கருத்து: கல்வித்துறை அதிகாரி
ஒருவர் கூறுகையில்,""தபால்துறையின் மெத்தனத்தால், தேர்வுத்துறைக்கு கெட்ட
பெயர் ஏற்பட்டுள்ளது. அதனால், திட்டத்தை மாற்றுவது குறித்து, ஆலோசிக்க
துவங்கி உள்ளோம்,'' என்றார்.
No comments:
Post a Comment