"ஐ.ஏ.எஸ்., போட்டித்தேர்வுக்கான பயிற்சி மையத்தை, காலை 8
மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, கோரிக்கை
எழுந்துள்ளது.
நாமக்கல்- மோகனூர் சாலை பழைய நீதிமன்ற வளாகத்தில் 45 லட்சம்
ரூபாய் மதிப்பில், கிளை நூலகம் மற்றும் போட்டித்தேர்வுக்கான பயிற்சி மையம்
அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி திறக்கப்பட்டது. இந்த பயிற்சி
மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல் குரூப் 4 வரை,
யு.பி.எஸ்.சி., போன்ற போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்காக 1,800க்கும்
மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி மாணவ, மாணவியர் படித்து
வருகின்றனர்.
அவர்களுக்காக வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி
வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்
இருந்து 70க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், தினமும் காலை
10 மணி முதல் மாலை 5 மணி வரை, இந்த நூலகம் செயல்படுகிறது.
அந்த நேரத்திலும் ஒரு சில மாணவ, மாணவியர் வந்து தங்களுக்கு
தேவையான போட்டித்தேர்வு புத்தகத்தை எடுத்து, படித்து தயார் செய்தும்
வருகின்றனர். இந்த நூலகம் தினமும் காலை, 10 மணிக்கு துவங்கி மாலை, 5
மணிக்கு முடிவடைவதால், ஏராளமானவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
கல்லூரி செல்லும் மாணவர்கள் மாலை, 5 மணிக்கு வரும் போது
போட்டித்தேர்வுக்கான பயிற்சி மையம் மூடப்பட்டுள்ளது. அதனால், ஏமாற்றத்துடன்
திரும்பிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. எந்த நோக்கத்துக்காக இந்த பயிற்சி
மையம் துவங்கப்பட்டதோ, அந்த காரணம் முழுமை பெறாத நிலையே நீடித்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற
மாணவ, மாணவியர் அதிக அளவில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று சாதனை படைக்க
வேண்டும் என்பதற்காகவே இந்த பயிற்சி மையம் துவங்கப்பட்டது. அவர்களின் நலன்
கருதி, இப்பயிற்சி மையத்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கல்லூரி மாணவர்கள் சிலர் கூறியதாவது: ஐ.ஏ.
எஸ்., கனவுகளுடன் உள்ள ஏழை மாணவர்கள், அதிக விலை கொடுத்து புத்தகம் வாங்கி
படிக்க முடியாது என்பதால், போட்டித்தேர்வுக்கான பயிற்சி மையத்தை
நாடுகின்றனர். பயிற்சி மையத்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து
வைத்தால், மாணவ, மாணவியர் தயார் செய்து கொள்வதற்கு வசதியாக இருக்கும்.
அதற்கு மாவட்ட நிர்வாகமும், நூலகத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment