சிவகங்கை மையத்தில், பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்த, ஆசிரியர்கள் போதிய
ஆர்வம் காட்டாததால், குறிப்பிட்ட சில பாடத்திற்கான விடைத்தாள்கள்,
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு
எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், விடைத்தாள் திருத்தும்
மையங்கள் ஏற்படுத்தப் படுகின்றன. சிவகங்கையில், ஒரு மையத்தில் மட்டுமே,
விடைத்தாள்கள் திருத்தப் படுகின்றன. 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,
பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு, விடைத்தாள்கள் அதிகமாக வந்துள்ளதால், ஆசிரியர்கள் பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும், ஒரு வாரத்திற்குள் பணியை முடிக்க,
பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசு தேர்வுத் துறையின்
உத்தரவை அடுத்து, சிவகங்கை மையத்தில் இருந்து, குறிப்பிட்ட சில
பாடத்திற்கான விடைத்தாள்கள், புதுக்கோட்டை மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
கல்வித் துறையினர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில், பிளஸ் 2
விடைத்தாள் திருத்தும் பணியில், ஆசிரியர்கள் சிலர், ஆர்வம் காட்டுவதில்லை.
ஏதாவது காரணத்தை கூறி, பணியில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். இதனால்,
ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.
குறிப்பிட்ட தேதிக்குள் பணியை முடிக்க வேண்டி இருப்பதால், பக்கத்து
மாவட்ட மையத்திற்கு விடைத்தாள்கள் அனுப்பப்பட்டுள்ளன. தவிர்க்க முடியாத
ஆசிரியர்கள் தவிர, மற்றவர்களை அவசியம் விடைத்தாள் திருத்தும் பணியில்
ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment