இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், 25
சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில், தமிழக அரசு தீவிரம் காட்டியுள்ள
நிலையில்,அரசின் முயற்சிக்கு எதிராக, தனியார் பள்ளிகள் போர்க்கொடி தூக்கி
உள்ளன.
"சட்டத்தின் படி, அங்கீகாரம்
இல்லாத பள்ளிகள் இயங்கக் கூடாது. அதன்படி, 2,000 பள்ளிகளுக்கு, அங்கீகாரம்
வழங்க, முதலில் நடவடிக்கை எடுத்துவிட்டு, அதன்பின், இட ஒதுக்கீட்டு
விவகாரத்திற்கு அரசு வரட்டும்" என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி,
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார், ஆவேசமாக
தெரிவித்தார்.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், ஏழை, எளிய, பொருளாதாரத்தில்
நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், ஆரம்ப
நிலை வகுப்பு சேர்க்கையில், 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இந்த இட ஒதுக்கீட்டில் சேரும் குழந்தைக்கான கல்வி கட்டணச் செலவை,
அரசிடம் இருந்து, தனியார் பள்ளிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த
திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டே, தனியார் பள்ளிகளில் மாணவர்கள்
சேர்க்கப்பட்டனர். ஆனால், எந்த பள்ளிக்கும், அரசு, கல்வி கட்டணத்தை
திருப்பித் தரவில்லை என, தனியார் பள்ளிகள் தரப்பில்
குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை, முழுமையான
அளவில் அமல்படுத்த, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகள்
இயக்குனர் தலைமையில், கண்காணிப்பு குழுவை அமைத்து, ஒட்டுமொத்த
செயல்பாடுகளையும், அதிகாரிகள் கண்காணிக்கவும், அரசு உத்தரவிட்டு உள்ளது.
25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நடக்கும் மாணவர் சேர்க்கைப் பணிகளை, மே,
3ம் தேதி ஆரம்பித்து, 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, அதிகாரிகள்
உத்தரவிட்டு உள்ளனர். அரசின், இந்த நடவடிக்கைக்கு, தனியார் பள்ளி சங்க
நிர்வாகிகள், எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க
பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: ஆர்.டி.இ., சட்டத்தின்படி, கடந்த
ஆண்டே, தனியார் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், அதற்கான
கட்டணத்தை, ஒரு பைசாவைக் கூட, தமிழக அரசு திரும்பத் தரவில்லை.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டிலும், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ்,
மாணவர் சேர்க்கையை நடத்திட, பல்வேறு கடுமையான உத்தரவுகளை, அரசு
பிறப்பித்துள்ளது. ஆர்.டி.இ., (கல்வி உரிமை சட்டம்) சட்டத்தின்படி,
அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் இயங்கக் கூடாது.
ஆனால், இட பிரச்னைகள் காரணமாக, 1,000 பள்ளிகளும், வேறு காரணங்களுக்காக,
1,000 பள்ளிகளும், அங்கீகாரம் இல்லாமல் இயங்குகின்றன. இந்த பிரச்னையை
தீர்ப்பதற்கும், அங்கீகாரம் கொடுப்பதற்கும், முதலில், அரசு நடவடிக்கை
எடுத்துவிட்டு, அதன்பின், இட ஒதுக்கீட்டின் கீழ், சேர்க்கை நடத்தும்
விவகாரத்திற்கு வர வேண்டும்.
பள்ளிகளுக்கு அங்கீகாரத்தை கொடுக்காமல், அந்த பள்ளிகளில், ஆர்.டி.இ.,
சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கையை மட்டும் நடத்தலாமா? மேலும், ஆறு வயது
முதல், 14 வயது வரை உள்ளவர்கள் தான், இந்த சட்டத்தின் கீழ் வருகின்றனர்.
அதன்படி, எல்.கே.ஜி., வகுப்பு, இந்த சட்டத்தின் கீழ் வராது. இதை, டில்லி
ஐகோர்ட்டும் தெரிவித்துள்ளது. ஆனால், எல்.கே.ஜி., சேர்க்கையில், இந்த
சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு
நந்தகுமார் கூறினார்.
இதனால், அரசின் முயற்சிக்கு, தனியார் பள்ளிகள் தரப்பில், எந்த அளவிற்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என்பது, கேள்விக்குறியாக உள்ளது.
No comments:
Post a Comment