செஞ்சியில் காணாமல் போன பத்தாம் வகுப்பு
விடைத்தாள்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து
தமிழக அரசு ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
வைகைச்செல்வன் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வி பொதுத் தேர்வுகளில் வினாத்தாளில் குறைபாடு, தேர்வுக்கு முன் வினாத்தாள் வெளியீடு மற்றும் விடைத்தாள்கள் போக்குவரத்தின்போது காணாமல் போனது தொடர்பாக சட்டப் பேரவையில் திமுக, இடதுசாரிகள், பாமக, காங்கிரஸ், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியன வெள்ளிக்கிழமை கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு அமைச்சர் வைகைச்செல்வன் அளித்த பதில்:-
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாளில் பொருத்துக பிரிவில் தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு தவறான விடை எழுதியிருந்தாலும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். பொதுத் தேர்வு வினாத்தாள்கள் அனைத்தும் ஒருகுறிப்பிட்ட அச்சகத்தில் அச்சிடப்படுகின்றன. எங்கு அச்சிடப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு பாடத்துக்கும் ஆறு விதமான வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு அவற்றுக்கு எண்கள் கொடுக்கப்பட்டு ரகசியமாக அச்சகத்துக்கு அனுப்பப்படுகின்றன.
பின்னர், அவை அச்சிடப்பட்டு சீல் வைக்கப்பட்டு விடுகின்றன. இந்த வினாத்தாள்களில் ரகசியம் காக்கப்படுவதால் தேர்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேர்வு நாளன்று அவற்றை பிரிக்கும் போதுதான் அதிலுள்ள சிறு தவறுகளைப் பார்க்க முடிகிறது. எனவே, ஒன்றிரண்டு தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
தமிழ் இரண்டாம் தாளில் 38ஆவது வினாவில் வங்கிப் படிவம் இணைக்கப்படவில்லை. இந்தக் கேள்விக்கு முயற்சித்திருந்தாலே முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் உள்பட மொத்தம் 5 கட்டங்களாக தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தத் தேர்வுகளின் போது மாணவர்கள் யாருக்கும் வங்கிப் படிவங்கள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் படம் வரைந்தே எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தப் பயிற்சி இருக்கிறது.
ஆனாலும், வங்கிப் படிவம் இணைக்கப்படவில்லை என்ற தகவலை தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிஷங்களுக்கு முன்பாக அறிந்தவுடன் தேர்வுக்கூடங்களில் உள்ள கண்காணிப்பாளர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, வினாவுக்கு முயற்சித்திருந்தால், மாணவர்களுக்கு 5 முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டது.
30 ஆண்டுகளாக தபால் முறை: விடைத்தாள்களை தபால் மூலம் அனுப்பும் முறை பாரம்பரியமாக கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடைத்தாள்களை அனுப்பும் பணியில் நவீன முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்படும்.
விருத்தாசலத்தில் விடைத்தாள்கள் பதிவு செய்யப்பட்டு ரயிலில் அனுப்பப்பட்டது. ரயில் 300 மீட்டர் திருப்பத்தில் திரும்பும் போது விடைத்தாள்களில் இரண்டு கட்டுகள் கீழே விழுந்தன. அதில், 63 விடைத்தாள்கள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன.
சேதம் அடைந்த 63 தமிழ் 2 விடைத்தாள்களுக்கு தமிழ்தாள் 1-ல் பெறப்படும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என ஏற்கெனவே துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை புதியதல்ல. கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் வேலூர் ஊரிஸ் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டு விடைத்தாள்கள் எரிந்து நாசமாகின. அப்போது பின்பற்ற நடைமுறையே இப்போது பின்பற்றப்பட்டுள்ளது.
அதேசமயம், ஆங்கிலம் முதல் தாளுக்கான 221 விடைத்தாள்கள் காணாமல் போயுள்ளன. இந்தப் பிரச்னையில் அஞ்சல் துறையின் அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட 221 மாணவ-மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்தலாமா என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை பரிசீலித்து வருகிறது என்றார் அமைச்சர் வைகைச்செல்வன்.
No comments:
Post a Comment