நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், ஊழியர் பற்றாக்குறை
நிலவுதால், அங்கு பணிபுரிவோர் கூடுதல் பணிச்சுமையால் பெரும் அவதிக்குள்ளாகி
வருகின்றனர்.
நாமக்கல் மோகனூர் சாலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்
அமைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில்
பணிபுரியும் ஆசிரியர் இடமாறுதல், நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசு நிதி
பெற்றுத் தருதல் போன்ற பல்வேறு பணிகள் அங்கு நடக்கிறது.
அந்த பணிகள் செய்வதற்காக, அலுவலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
உட்பட, முதன்மைக் கல்வி அலுவலரின், இரு நேர்முக உதவியாளர், இரு
கண்காணிப்பாளர், எட்டு உதவியாளர், இரு டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடம்
ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த, 2004ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், உதயமான போது, நாமக்கல்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து ஒரு கண்காணிப்பாளர், இரு
உதவியாளர், ஒரு டைப்பிஸ்ட் என, மொத்தம் நான்கு பணியாளர்கள், அந்த
மாவட்டத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அதன்பின், காலியாக உள்ள
பணியிடத்துக்கு ஊழியர்கள் மாற்றம் செய்யப்படவில்லை.
ஆண்டுதோறும் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும்
நிலையில், குறைவான எண்ணிக்கையில் உள்ள ஊழியர்கள் மூலம் அனைத்து பணிகளையும்
செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம்,
உதவி தொடக்க கல்வி அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
மாவட்ட கல்வி அலுவலகத்தினர், 9ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை உள்ள அரசு,
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான நிதி பெற்றுத் தருவதற்கான
ஆவணங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வழங்குதல் போன்ற பல்வேறு
பணிகள் செய்கின்றனர்.
மற்ற மாவட்டங்களை விட, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் அதிக
எண்ணிக்கையில் உள்ளன. அதனால், மாவட்ட கல்வி அலுவலகத்தினர் அனைத்து
பணிகளையும் மேற்கொள்ள இயலுவதில்லை. எனவே, மாவட்ட முதன்மை கல்வி
அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை இருந்த போதிலும், மாவட்ட கல்வி அலுவலக
பணிகளும் கூடுதலாக செய்யப்படுகிறது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊழியர்கள்
சரியான எண்ணிக்கையில் இருந்தால், எந்த பிரச்னையும் இல்லை. கடந்த, 2004ம்
ஆண்டு நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து, கிருஷ்ணகிரி
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு நான்கு ஊழியர்கள் மாற்றப்பட்டனர்.
அதன்பின், அந்த பணியிடத்துக்கு ஊழியர்கள் நியமனம் செய்யவில்லை. எனவே,
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ள ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி
செய்ய வேண்டும். அதுபோல் நாமக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக மாவட்ட கல்வி
அலுவலகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போது தான் பணிச்சுமை குறையும்,
என்றனர்.
No comments:
Post a Comment