நெல்லையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
விண்ணப்பங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டும் பிஏ.,
ஆங்கில இலக்கியம் மற்றும் பிகாம்., படிப்புகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியாயின.
இதனிடையே இன்ஜினியரிங், மருத்துவம், கால்நடை பராமரிப்பு படிப்புகளுக்கான
விண்ணப்பங்கள் வினியோகம் நடந்து வருகிறது. தொழிற்படிப்புகளுக்கான
விண்ணப்பங்கள் வினியோகம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், கலை மற்றும்
அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வாங்கவும் மாணவ, மாணவிகள் அதிக
ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நெல்லை ராணி அண்ணா கல்லூரி நெல்லையில் உள்ள ஒரே அரசு
பெண்கள் கல்லூரியாகும். அரசு கல்லூரிகளில் படித்தால் சலுகைகள் அதிகம், அதே
நேரத்தில் கட்டணமும் குறைவு என்பதால், ஏராளமான மாணவிகள் இந்த கல்லூரிகளில்
விண்ணப்பங்களை வாங்கி செல்கின்றனர்.அதுபோல் பாளை. பகுதியில் உள்ள சேவியர்
கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, சாராள் தக்கர் கல்லாரி, சாரதா
கல்லூரி, ஜான்ஸ் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள்
விண்ணப்பங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை
வாங்க கூட்டம் அலை மோதுவதால், பாளை. பகுதியே திருவிழாக்கோலம் பூண்டது போல்
காட்சியளிக்கிறது.
இன்ஜினியரிங் படிப்பை போல், நடுத்தர மாணவர்கள் தற்போது
பிஏ., ஆங்கில படிப்பபையே விரும்புகின்றனர். இன்ஜினியரிங் படித்தால், அதிக
செலவாகும். அதே நேரத்தில் படித்து முடித்தாலும், ஐ.டி., துறையில் நல்ல வேலை
கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு, பெரும்பாலான மாணவர்கள் பிஏ.,
ஆங்கிலம் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
பிஏ., ஆங்கில இலக்கியம் படித்தால், பிஎட்., முடித்து
தொடர்ந்து ஆசிரியர் பணிக்கு சென்று விடலாம். மேலும் எம்.ஏ., எம்பில்.,
போன்ற மேற்படிப்புகளை தொடரலாம் என நினைக்கின்றனர். ஆங்கில இலக்கிய
பாடத்திற்கு மாணவ, மாணவிகளிடையே அதிக மவுசு ஏற்பட்டுள்ளதால், இந்த
பாடத்திற்கு மட்டும் சில கல்லூரிகளில் தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்பட
இருப்பதாக தெரிகிறது.
நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆங்கில
இலக்கியத்திற்கு அடமிஷன் வழங்கப்படுகிறது. இந்த படிப்புக்கு "சிபாரிசு"
தவிர்க்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
வழக்கம்போல் இந்த ஆண்டும் பிகாம்., படிப்புக்கு மவுசு
குறையவில்லை. பிகாம்., படித்தால், வேலை நிச்சயம் என்ற நிலையில், பிளஸ் 2
வகுப்பில் வணிகவியலை முக்கிய பாடமாக எடுத்தவர்கள், பிகாம்., படிப்புக்கு
"குறி" வைத்துள்ளனர். பிகாம்., படிப்புக்கும் "சிபாரிசு" கிடையாது என சில
கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது. 1000 மார்க்கிற்கு மேல் எடுத்த
மாணவர்களுக்கு மட்டுமே பிகாம்., படிப்பிற்கு அட்மிஷன் வழங்கப்படுகிறது. சில
கல்லூரிகளில் மட்டும் "ரகசிய சிபாரிசு" ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
அதுபோல் பிஎஸ்சி., கணித பாடத்திற்கும் மாணவ, மாணவிகளிடையே
நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கணிதம் பாடத்திற்கு முதல் "சாய்ஸ்" கொடுக்கும்
மாணவ, மாணவிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு இரண்டாவது சாய்ஸ்
கொடுக்கின்றனர்.
வழக்கம்போல் இந்த ஆண்டு பிஏ., ஆங்கில இலக்கியம், பிகாம்.,
மற்றும் பிஎஸ்சி., கணிதம் பாடங்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான மாணவ, மாணவிகள் இந்த பாடங்களை குறிப்பிட்டே விண்ணப்பங்களை
வாங்கி செல்வதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க இன்னும் நாட்கள்
இருக்கிறது. ஆங்கில இலக்கியம் மற்றும் பிகாம்., படிப்புகளுக்கு போட்டி
நிலவும் பட்சத்தில் சில குறிப்பிட்ட கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு
நடத்தப்படலாம் என தெரிகிறது.
No comments:
Post a Comment