அரசு அறிவிப்புப்படி கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ், ஏழை
மாணவியை ஒன்றாம் வகுப்பு சேர்க்க இழுத்தடித்த தனியார் பள்ளி நிர்வாகம்,
ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால், அந்த மாணவிக்கு விண்ணப்பம் வழங்கி
உள்ளது.
திருச்சி, கே.கே.,நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன்
மனைவி சுதா. இவர் தனது மகள் மீனாட்சியை அப்பகுதியில் உள்ள ஆல்ஃபா மெட்ரிக்
பள்ளியில் சேர்க்க விரும்பினார். ஏழ்மை நிலையில் உள்ள இவர், கடந்தாண்டு
தனது மகளுக்கு ஒன்றாம் வகுப்பு சேர்க்க "சீட்" கேட்டார். பள்ளி நிர்வாகம்
உரிய பதில் அளிக்கவில்லை.
"ஏழை குழந்தைக்கு தனியார் பள்ளியில் கட்டாயக் கல்வி உரிமை
சட்டத்தின் கீழ் இடமளிக்க வேண்டும்" என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நடப்பாண்டு தனது குழந்தையை ஒன்றாம் வகுப்பு சேர்க்க வேண்டும் என
பள்ளி நிர்வாகத்தை பலமுறை தொடர்பு கொண்டு கேட்டபோதும், உரிய பதில் இல்லை.
இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிக்
பள்ளி ஆய்வாளரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுரைப்படி, கடந்த 2ம் தேதி
அப்பள்ளிக்குச் சென்றார். அப்போதும் விண்ணப்பம் வழங்கவில்லை. 8ம் தேதி
வரும்படி கூறியுள்ளனர்.
தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதால், திருச்சி மாவட்ட ஆட்சியர்
ஜெயஸ்ரீயிடம் நேற்று மனு அளித்தார். அதில், "தொடர்ந்து
அலைக்கழிக்கப்படுகிறேன். அரசு உத்தரவுப்படி எனது குழந்தையை அப்பள்ளியில்
ஒன்றாம் வகுப்பு (மெட்ரிக் அல்லது சி.பி.எஸ்.இ.,) சேர்க்க உதவும்படி
கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ஆட்சியர்
ஜெயஸ்ரீயின் அதிரடி நடவடிக்கையால், அந்த மாணவியை சேர்க்க பள்ளி சார்பில்
விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment