"பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவ,
மாணவியர்களின் உயிரிழப்பை தடுக்க குட்டைகள், ஏரிகள், கற்கள் தோண்டப்பட்ட
குவாரிகள் மற்றும் மணல் குவாரிகளை, பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறை
அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்" என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி,
கடவூர், தரகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
இதை தவிர பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில், கற்களை வெட்டி எடுக்க
தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஆனால், இத்தகைய கல்குவாரிகளில் போதுமான பாதுகாப்பு உள்ளதா? என்பது
கேள்விக்குறியாக உள்ளது. இதை தவிர, கிராம பஞ்சாயத்துகளில் பல்வேறு
திட்டங்களின் அடிப்படையில், பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது, தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தற்போது கோடை
விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அரவக்குறிச்சி
அருகே ஆண்டிப்பட்டி கோட்டையில், உள்ள கல்குவாரி குழியில் குளிக்க சென்ற,
அரவிந்தன், மகேந்திரன் ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி
இறந்தனர்.
சமீபத்தில், அரவக்குறிச்சி அருகே தோண்டப்பட்ட போர்வெல் குழாயில்,
முத்துலட்சுமி என்ற சிறுமி விழுந்து இறந்தாள். இதையடுத்து போர்வெல்
குழாய்களை, கண்காணிக்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம்
உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர்கள் ஆறுகள், ஏரிகள், குளம் மற்றும்
குட்டைகளில் குளிக்ககோ, மீன் பிடிக்க ஆர்வத்துடன் செல்வது வழக்கம். அப்போது
ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள நீர்
நிலைகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாட்டை செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
எடுப்பது அவசியம்.
No comments:
Post a Comment