கட்டணம் என்ற பெயரில், டி.ஆர்.பி.,யும், தேர்வுத் துறையும்,
தேர்வர்களிடம் இருந்து, அளவுக்கு அதிகமான கட்டணங்களை வசூலித்து வருகின்றன.
பகல் கொள்ளை அடிக்கும் இந்தச் செயலை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்
என, தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அனைத்து வகை ஆசிரியர்களுக்கும்,
போட்டித் தேர்வுகளை டி.ஆர்.பி., நடத்தி வருகிறது. இதற்காக, விண்ணப்ப
கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை, வசூலிக்கிறது. பல லட்சக்கணக்கான
தேர்வர்களுக்கு, பல வகையான தேர்வுகளை நடத்தும் டி.என்.பி.எஸ்.சி.,
அதிகபட்சமாக, 125 ரூபாயைத் தான், தேர்வுக் கட்டணமாக வசூலிக்கிறது.
ஆனால், டி.ஆர்.பி., தேர்வுக் கட்டணமாக, 500 ரூபாய் வசூலித்து வருகிறது.
டி.இ.டி., தேர்வை, 7 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த வகையில், தேர்வுக்
கட்டணமாக, 35 கோடி ரூபாயும், விண்ணப்ப கட்டணமாக, 3.5 கோடி ரூபாயும்
குவிகிறது. ஏற்கனவே நடந்த டி.இ.டி., தேர்வில், 40 கோடி ரூபாய் திரண்டது.
தேர்வுக் கட்டணம், தேர்வர்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால், தேர்வுக் கட்டணத்தை குறைப்பது குறித்து ஆலோசிப்பதாக, சில
மாதங்களுக்கு முன், டி.ஆர்.பி., தெரிவித்தது. ஆனால், எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை.
கடந்த, 9ம் தேதி, முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை,
டி.ஆர்.பி., அறிவித்தது. இந்த தேர்வுக்கும், தேர்வுக் கட்டணம், 500 ரூபாய்
என்றும், விண்ணப்ப கட்டணம், 50 ரூபாய் என்றும், டி.ஆர்.பி.,
அறிவித்துள்ளது. இந்த தேர்வை, 2 லட்சம் பேர் வரை எழுதுவர். இந்த வகையில்,
10 கோடி ரூபாயை குவிக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
விரைவில், டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளது. இந்த
தேர்வை, ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுவர். இதன் மூலமும், 40 கோடி
ரூபாய் திரளும். படித்து, வேலையின்றி தவித்துவரும் பட்டதாரிகளிடம், கட்டணம்
என்ற பெயரில், டி.ஆர்.பி., பகல் கொள்ளை அடித்து வருகிறது.
இதேபோல், தேர்வுத் துறையும், கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு
மாணவர் களிடமும், பல்வேறு கட்டணங்களாக, பல லட்சம் ரூபாயை வசூலித்து
வருகிறது. குறிப்பாக, பிளஸ் 2 தேர்வுக்குப் பின், அமல்படுத்தப்படும்,
விடைத்தாள் நகல் பெற, மொழிப் பாடங்களுக்கு, 550 ரூபாய், இதர பாடங்களுக்கு,
275 ரூபாய், மறு கூட்டலுக்கு, 305 ரூபாய், மறுமதிப்பீடு செய்ய, 1,010
ரூபாய் என, தொட்டதற்கு எல்லாம், 500, 1,000 ரூபாய் என, வசூலித்து வருகிறது.
விடைத்தாள் நகல்கள், முதலில், தபால் மூலம், மாணவர்களுக்கு
அனுப்பப்பட்டன. விடைத்தாள் நகலுக்கு, 200 ரூபாய், விண்ணப்ப கட்டணம், 20
ரூபாய், சர்வீஸ் சார்ஜ், 5 ரூபாய் மற்றும் தபால் கட்டணம், 50 ரூபாய் என,
275 ரூபாய், வசூலிக்கப்பட்டது.
புது திட்டத்திலும் கை வரிசைதற்போது, இணையதளம் வழியாக, விடைத்தாள் நகலை,
"டவுன்லோடு" செய்யும் திட்டத்தை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி,
மாணவர்களின் விடைத்தாள்கள், "ஸ்கேன்" செய்யப்பட்டு, இணையதளத்தில்
வெளியிடப்படும். மாணவர்கள், "டவுன்லோடு" செய்து கொள்ள வேண்டும்.
இதில், தபால் செலவுக்கு வழியே கிடையாது. அப்படியிருக்கும்போது, 50
ரூபாயை குறைத்திருக்க வேண்டும். ஆனால், தேர்வுத்துறை செய்யவில்லை.
விடைத்தாள் நகல் பெற, 1 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிப்பர் என்பது
குறிப்பிடத்தக்கது.
கட்டணம் என்ற பெயரில், பகல் கொள்ளை அடிக்கும் செயலை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment