உடற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கையை, தமிழக அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாக, உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
"விளையாட்டு துறையை மேம்படுத்த, முதல்வர், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து
வந்தாலும், விளையாட்டை வளர்க்க வேண்டிய உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளிகளில்
இல்லாத குறையை, இதுவரை போக்கவில்லை.
அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், 13.83 லட்சம் மாணவர்களுக்கு, வெறும்,
70 உடற்கல்வி ஆசிரியர்கள் என்ற நிலை தான் இப்போதும் இருக்கிறது" என,
உடற்கல்வி ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.
அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை
ஆசிரியர் மட்டுமே, அதிகளவில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
உடற்கல்வியையும், உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளி கல்வித்துறை,
ஓரங்கட்டிவிட்டது என, உடற்கல்வி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
ஒரு அரசு பள்ளிக்கு, ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற, குறைந்தபட்ச
நிலையையாவது, தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்பது, உடற்கல்வி
ஆசிரியர்களின், நீண்ட கால கோரிக்கை. ஆனால், புதிய ஆசிரியர் நியமன
அறிவிப்பில், உடற்கல்வி ஆசிரியர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாவதே
கிடையாது என்றும், அவர்கள் புலம்புகின்றனர்.
ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளிகளில், 14.63 லட்சம்
மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, உடற்கல்வி ஆசிரியர்களே
கிடையாது.
ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான அரசு நடுநிலைப் பள்ளிகளில்,
13.83 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இத்தனை லட்சம் மாணவர்களுக்கு,
வெறும், 70 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே இருக்கின்றனர்.
பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும், போதுமான உடற்கல்வி ஆசிரியர்கள் கிடையாது.
2,488 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு,
உடற்கல்வியை அளிக்க, உடற்கல்வி இயக்குனர் - நிலை 1ல், 340 பணியிடங்கள்
மட்டுமே உள்ளன. 9,10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர்
- நிலை 2ல், 89 ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த மோசமான நிலையை போக்க வேண்டும், போதுமான உடற்கல்வி ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதும், உடற்கல்வி ஆசிரியர்களின்
கோரிக்கைகளை கவனிக்க, உடற்கல்விக்கு என, தனி இணை இயக்குனரை நியமிக்க
வேண்டும் என்பதும், இந்த ஆசிரியர்களின், நீண்டகால கோரிக்கை.
இந்த கோரிக்கைகளுக்கு, பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில், விடிவுகாலம்
பிறக்குமா என, ஆசிரியர் எதிர்பார்த்தனர். ஆனால், உடற்கல்விக்கு என, தனி
இணைய இயக்குனரை நியமிப்பது குறித்து, அரசு பரிசீலனை செய்து வருவதாக
மட்டும், அமைச்சர் வைககைச் செல்வன் அறிவித்தார்.
ஆனால், புதிய உடற்கல்வி ஆசிரியர் நியமனம் குறித்து, எவ்வித அறிவிப்பும்
வெளியாகவில்லை. இது, அந்த ஆசிரியர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குனர் சங்க
நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், எங்களுக்கு விடியல்
கிடைக்கும் என, எதிர்பார்த்து, எதிர்பார்த்து, ஏமாற்றம் அடைவது தான்
மிச்சம். எங்களை, அரசும், அதிகாரிகளும், சுத்தமாக கண்டு கொள்வதில்லை.
கல்வித்துறை விழாக்களுக்கு ஏற்பாடு செய்வது, அழைப்பிதழ்கள் கொடுப்பது,
பாதுகாப்பு வேலைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் தான், எங்களது காலம்
கழிகிறது. விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்கென, முதல்வர், அவ்வப்போது பல
அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
ஆனால், விளையாட்டுகளை வளர்க்க வேண்டிய அளவிற்கு, உடற்கல்வி ஆசிரியர்கள்
இருக்கிறார்களா, அவர்களின் நிலை என்ன என்பது குறித்து, எப்போது அறிகிறாரோ,
அப்போது தான், எங்களுக்கு விடிவு கிடைக்கும். இவ்வாறு, அவர்கள் வேதனையுடன்
கூறினர்.
No comments:
Post a Comment