"இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைப்பது மிகவும் சுலபம். ஆனால்,
அதுமட்டும் வெற்றியல்ல; பிடித்த பாடத்தை தேர்வு செய்து, நன்றாக படித்து,
படிப்பை முடிக்க வேண்டும்; அதுவே, உண்மையான வெற்றி,'' என,
கல்வியாளர் ரமேஷ்பிரபா பேசினார்.
தினமலர் நடத்திய "உங்களால் முடியும்" நிகழ்ச்சியில், கல்வியாளர்
ரமேஷ்பிரபா பேசியதாவது: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவ,
மாணவியர், தங்களது பெற்றோருடன் ஓரிரு நாட்கள் முன்னதாகவே சென்னை சென்று
விடுவது சிறந்தது. ஒரு நாள் முன்னதாகவே, கவுன்சிலிங் வளாகத்துக்கு சென்று,
அங்குள்ள நடைமுறைகளை தெரிந்துகொண்டால், மிக சுலபமாக கவுன்சிலிங்கை
எதிர்கொள்ள முடியும்.
முன்பெல்லாம், இன்ஜினியரிங் கல்லூரிகள் மிகவும் குறைவாகவே இருந்தன.
தற்போது, இரண்டு லட்சம் இடங்கள் உள்ளன. கடந்தாண்டு கவுன்சிலிங்
முடிந்ததும், ஏராளமான இடங்கள் காலியாக இருந்தன. எனவே, இன்ஜினியரிங்கில்
இடம் கிடைப்பது மிகவும் சுலபமானது. ஏதேனும் ஒரு கல்லூரியில் நிச்சயம் இடம்
கிடைக்கும் என்ற நம்பிக்கையை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
இன்ஜினியரிங்கில், ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் அண்டு
எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் என ஏராளமான பாடப்பிரிவுகள் உள்ளன. பிடிக்காத
பாடங்களை தேர்வு செய்துவிட்டு, மதிப்பெண் இழந்தும், தோல்வியடைந்தும்
எதிர்காலத்தில் வருந்தக் கூடாது.பிடித்த பாடம் எது என்பதை தேர்வு செய்து,
படிக்க வேண்டும். கல்லூரிக்குள் நுழைவது மட்டும் வெற்றி இல்லை; நல்ல
மதிப்பெண் பெற்று, படிப்பை முடிக்க வேண்டும்; அதுவே உண்மையான வெற்றி என்பதை
அனைவரும் உணர வேண்டும்.
பாடப்பிரிவை போல், கல்லூரியை தேர்வு செய்வதும் மிகவும் முக்கியம். அண்ணா
பல்கலையின் நேரடி கல்லூரிகளாக, 3 கல்லூரிகள்; உறுப்பு கல்லூரிகள் 13; இவை
தவிர, அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், 523 சுயநிதி
கல்லூரிகள் இயங்கி வருகின்றன.அண்ணா பல்கலையில் நேரடி மற்றும் உறுப்பு
கல்லூரிகளில் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்; அரசு கல்லூரியில் 10 ஆயிரம்
ரூபாய் என மிக குறைந்த கல்வி கட்டணமே பெறப்படுகிறது. அதேபோல்,
இக்கல்லூரிகள், நல்ல வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருகின்றன என்பதை
கவனத்தில் கொள்ள வேண்டும்.
படிப்புக்கும், வேலைக்கும் 95 சதவீதம் நேரடி தொடர்பு இருப்பது இல்லை.
எனவே, வேலை வாய்ப்பை உறுதி செய்யும் சிறந்த கல்லூரி என்றால், எந்த
பாடப்பிரிவு கிடைத்தாலும், தேர்வு செய்து, படிக்கலாம். சில பெற்றோர், மகன்,
மகளை ஹாஸ்டலில் விடுவதற்கு பயந்து, அருகாமையில் உள்ள கல்லூரிகளையே
தேடுகின்றனர்; இது, தவறு. ஹாஸ்டல் என்பது மாணவர்களுக்கு நல்ல நண்பர்களை
உருவாக்கித் தருவதோடு, ஒற்றுமை மனப்பான்மையை வளர்க்கும். வாழ்வில் தோல்வி
ஏற்பட்டாலும், அதிலிருந்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி
தரும் என்பதை, பெற்றோர் உணர வேண்டும்.
No comments:
Post a Comment