ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், அடுத்த
வாரத்தில் இருந்து வழங்கப்பட உள்ளன. மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி
மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
கடந்த கல்வி ஆண்டு நிலவரப்படி,
625 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில், 40 ஆயிரம்
இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளன.
எனினும், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த ஆண்டு, கலந்தாய்வு மூலம், வெறும், 9,000 இடங்களே நிரம்பின.
நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர் எண்ணிக்கையும், மோசமாக உள்ளது.
இதனால், பல தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பி.எட்., கல்லூரிகளாக
மாற்றப்படுகின்றன.
பி.எட்., முடித்து, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றால், வேலைக்கு
உத்தரவாத நிலை இருப்பது தான், இதற்கு காரணம். பட்டதாரி ஆசிரியர், முழுக்க
முழுக்க, "மெரிட்" அடிப்படையில், நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால்,
ஆசிரியர் பயிற்சி படிப்பு படிக்கும் இடைநிலை ஆசிரியர், டி.இ.டி., தேர்வில்
தேர்ச்சி பெற்றாலும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி
நியமனம் நடக்கும் என்ற நிலை உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டி வழக்கு முடியும் வரை, பதிவு மூப்பு முறையே,
நடைமுறையில் இருக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற
காரணங்களால், ஆசிரியர் பயிற்சியை பெற, மாணவர் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில், 2013-14ம் ஆண்டு சேர்க்கைக்காக, அடுத்த வாரத்தில்
இருந்து, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி
மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும்
முன், ஒன்றுக்கு பலமுறை, மாணவர்கள் ஆலோசித்து, முடிவு எடுப்பது சிறந்தது.
No comments:
Post a Comment