பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-4,
குரூப்-2,வி.ஏ.ஓ., தேர்வுகளுக்காக மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் இலவச
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தேர்வர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர்
தரேஷ்அஹமது வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
நடத்தும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச்
சார்ந்தவர்கள் அதிகளவில் தேர்வு பெறாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையை மாற்றும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணய
தேர்வுகளுக்காக சென்ற ஆண்டு மாவட்ட நிர்வாகத்தால் பயிற்சி வகுப்புகள்
நடத்தப்பட்டன. இந்த பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்ற, 95 நபர்கள்
தேர்ச்சி அடைந்து வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் மற்றும் நேரடி நியமன உதவியாளர்
உள்பட பல்வேறு பணியிடங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெறும் போட்டித் தேர்வுகளை எழுதும் தேர்வர்களுக்காக
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இலவசமாக
பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள
ஆர்வமுடையவர்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 4ம்
தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முன்பதிவு செய்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கான
தகுதி எழுத்து தேர்வு பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் வரும் 5ம் தேதி
காலை 10 மணிக்கு நடத்தப்படும். தேர்வர்கள் தேர்விற்கு ஒரு மணிநேரம்
முன்னதாக வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறை விபரத்தை தெரிந்து கொள்ள
வேண்டும்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விபரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம்,
ஆர்.டி.ஓ., அலுவலகம், பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை தாலுகா
அலுவலகங்கள், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய
பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களிலும் உள்ள விளம்பர பலகையில் 5ம் தேதி மாலை 5
மணிக்கு ஒட்டப்படும். இதை பார்த்து தங்கள் தேர்ச்சி விவரம் மற்றும்
பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடத்தினையும், நேரத்தினையும் தெரிந்து
கொள்ளலாம்.
இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு அணிகளாக
பிரிக்கப்பட்டு தனித்தனி அலுவலர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம்
6ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இது குறித்து
மேலும் விபரம் அறிந்து கொள்ள 94450-43119 என்ற மொஃபைல் நம்பரில் தொடர்பு
கொண்டு விபரம் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment