இந்திய மக்கள்தொகையில் 54% பேர் இருபத்து நான்கு வயதுக்குட்பட்டவர்கள்.
இவர்களில் படித்த இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், "திறனுடைத்
தொழிலாளர்' (ஸ்கில்டு லேபர்) கிடைப்பதில்லை என்பதுதான் மிகப்பெரும்
குறைபாடாக இருக்கிறது.பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, மருத்துவக்
கல்லூரி, கலை - அறிவியல் கல்லூரி என எந்த ஒரு கல்வி நிறுவனத்தில் படித்துப்
பட்டம் பெற்றவர் என்றாலும், அவர் நேரடியாக ஒரு தொழிலில் ஈடுபடும் திறமை
இல்லாதவராக இருக்கிறார்.
இவர்கள் தொழிற்கூடங்களையும், கருவிகளையும் ஏட்டில்
மட்டுமே படித்தவர்கள். கணினியின் மெய்நிகர் காட்சியில் (வெர்சுவல்
ரியாலிடி) பழகியவர்கள். மெய்யான இயந்திரங்களுடன் பழகியவர்கள் அல்லர். ஒரு
தொழில் நிறுவனம், தனது துறை சார்ந்த படிப்பில் பட்டம் பெற்றவர் என்ற
எண்ணத்தில் ஓர் இளைஞரைத் தேர்வு செய்கிறது. அவரைக் குறைந்தபட்சம் 3
மாதங்களுக்கு தங்கள் தொழிற்கூடத்தில் பயிற்சி தந்து அவரைத் திறனுடைத்
தொழிலாளராக மாற்றுகிறது. இதனால் ஏற்படும் கால விரயம் மற்றும் சம்பள விரயம்
தவிர்க்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்பதுதான் அனைத்துத் தொழிற்கூடங்களின்
விருப்பம். தற்போது சில பல்கலைக்கழகங்களில் புதியமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. தொழிற்கல்வி சார்ந்த
சில படிப்புகளில், அந்தத் துறை சார்ந்த தொழிற்சாலையிலேயே ஆறு மாதம் (ஒரு
பருவத்தேர்வு காலம்) தொழில் செய்து, அது தொடர்பான தேர்வில் வெற்றி
பெறுவதைப் படிப்பின் ஓர் அங்கமாக மாற்றி வருகின்றன.
இந்த நடைமுறை,
புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே எளிதில் சாத்தியமாகிறது. மற்ற
சாதாரண பல்கலைக்கழகங்களுக்கு, தொழிற்கூடங்களைப் பணியவைக்கும் செல்வாக்கு
இல்லை.இப்படியான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும்போது, இதில் மத்திய, மாநில
அரசுகள் தலையிடுவதுதான் சரியானதாக இருக்க முடியும். அந்த வகையில், மத்திய
அமைச்சரவை அண்மையில் அனுமதி அளித்துள்ள, தன்னாட்சி பெற்ற அமைப்பாகிய "தேசிய
திறன் மேம்பாட்டு முகமை' (நேஷனல் ஸ்கில் டெவலப்மென்ட் ஏஜன்ஸி) விரைவில்
நடைமுறைக்கு வரும்போது இதற்கான தீர்வுகள், முழுமையாகக் கிடைக்காவிட்டாலும்,
பெருமளவு கிடைக்கும் என்று நம்பலாம். தனியார் மற்றும் அரசுத் துறைக்குத்
தேவையான திறனுடைத் தொழிலாளர்களை உருவாக்குவதில் இந்த முகமை ஒருங்கிணைந்து
செயலாற்றும் என்று சொல்லப்பட்டாலும், இதன் செயல்பாடு குறித்த வரன்முறைகளை,
இந்தத் தன்னாட்சி பெற்ற முகமைதான் முடிவு செய்யும்.
என்ன காரணத்தினாலோ,
இந்த முகமை நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அரசு
அறிவித்துள்ளது. ஆனால், மத்திய தொழிற்துறை அமைச்சகத்தின் சார்பில் 12-ஆவது
ஐந்தாண்டு திட்டக்காலத்தில் 5,000 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கத்
திட்டமிடப்பட்டுள்ளதாக அத்துறையின் அமைச்சர் அறிவித்திருந்தார். திறன்
மேம்பாட்டுப் பயிற்சி என்பது தொழிற்துறையின் தேவையைக் கருத்தில் கொண்டு
அமைய வேண்டுமே அல்லாமல், சந்தைத் தேவையைக் கருதியதாக இருக்கக் கூடாது.
தொழில் தேவை என்பது தொழிற்கூடத்துடன் இணைந்ததான திறன் மேம்பாட்டை
உருவாக்கும். அதற்கேற்பத் திறனுடைத் தொழிலாளர் பெருகுவார்கள்.
அந்தத்
தொழிற்கூடம் புதிய தொழில்நுட்பத்துக்கு மாறும்போது அதற்கேற்ப, மிக விரைவில்
அந்தத் தொழிலாளி தன்னைத் தகவமைத்துக்கொள்ளவும் முடியும். ஆனால், சந்தைத்
தேவையைக் கருதி அளிக்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் சந்தை
மாற்றங்களுக்கு உட்பட்டவை, வழக்கொழிபவை.இளைஞர்களைத் திறனுடைத்
தொழிலாளர்களாக மாற்றுவதில் ஏற்கெனவே பல்வேறு பயிற்சி முகாம்கள் பல்வேறு
துறைகள் மூலம் நடத்தப்படுகின்றன. ஆனால், அவற்றால் பெரும் பலன்
ஏற்பட்டுவிடவில்லை. உதாரணமாக, டி.வி. மெக்கானிக், ரெப்ரிஜிரேட்டர்
பழுதுபார்த்தல், செல்போன் பழுதுநீக்குதல், பெண்களுக்கான தையல் வகுப்புகள்
உள்ளிட்ட பல பயிற்சிகள் அரசின் நிதியுதவியோடு இலவசமாக அளிக்கப்படுகின்றன.
"பயன்படுத்தியபின் தூக்கியெறி', "பழையதைக் கொடுத்து புதியதை வாங்கிக்கொள்'
என்கின்ற வணிக உத்திகளால் இத் தொழிற்பயிற்சிகள் பெற்ற பலருக்கும் எந்தப்
பயனும் கிடைக்காமல் போய்விடுகிறது.
இத்தகைய பயிற்சிகள் அரசின்
நிதிஒதுக்கீடு காலியாக மட்டுமே உதவுகின்றன.இதே பயிற்சிகளை, அப்பொருள்களை
உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களில் இவர்கள் கற்றிருந்தால், இவர்களுக்குப்
பணி வாய்ப்பு கிடைப்பதோடு, விருப்பமும் முதலீடு செய்யும் வசதியும்
உள்ளவர்கள், இத் தொழிற்கூடங்களுக்கு அயல்பணி ஒப்பந்ததாரர்களாக மாறவும்,
"ஆக்ஸிலரி யூனிட்' அமைக்கவும் வாய்ப்புக் கிடைத்திருக்கும்.
தேசிய திறன்
மேம்பாட்டு முகமையின் செயல்பாடு, தனியார் மற்றும் அரசுத் தொழிற்கூடங்களில்
அந்தந்தத் தொழில் தேவைக்காக, அவர்கள் நிர்ணயிக்கும் கல்வித் தகுதி உள்ள
இளைஞர்களுக்கு, அதே தொழிற்கூடத்தில் பயிற்றுவிப்பதாக அமைய வேண்டும்.
இளைஞர்களுக்கும் தொழிற்துறைக்கும் ஒரு பாலமாக இந்த முகமை செயல்பட வேண்டும்.
தானும் இன்னொரு பயிற்சிக்கூடமாக மாறிவிடக் கூடாது."தேசிய திறன் மேம்பாட்டு
முகமை' தொழில் துறை அல்லது மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படாமல்
நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படுவதுதான், திட்டத்தின் வெற்றியைச்
சந்தேகிக்கச் செய்கிறது.
No comments:
Post a Comment