பிளஸ்–2 படிக்காமல் பட்டப்படிப்பை முடித்துள்ளதாக கூறி தலைமை ஆசிரியர்
பதவி உயர்வை திரும்பப் பெற்ற கல்வி அதிகாரியின் நடவடிக்கையை ரத்து செய்து
மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில்
தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கணேசன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில்
தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
நான், 1987–ம் ஆண்டு இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். 2009–ம்
ஆண்டு பி.லிட் முடித்தேன். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கு
பட்டப்படிப்பு முடித்து பி.எட் படித்து இருக்க வேண்டும். இல்லையென்றால்
பி.லிட் முடித்து இருக்க வேண்டும். நான், பி.லிட் முடித்து இருந்ததால்
2.6.2010 அன்று தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன். இதற்கு கல்வி
அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.
திரும்பப் பெற உத்தரவு
இந்த நிலையில் நான், எஸ்.எஸ்.எல்.சிக்கு பின்பு பிளஸ்–2 படிக்கவில்லை
என்றும், பிளஸ்–2 படிக்காமல் நேரடியாக பி.லிட் படித்ததால் எனக்கு தலைமை
ஆசிரியர் பதவி உயர்வு அளித்தது தவறு என்றும் கல்வி அதிகாரிக்கு புகார்
அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில் 20.2.2013 அன்று மாவட்ட தொடக்க கல்வி
அதிகாரி எனக்கு வழங்கப்பட்ட தலைமை ஆசிரியர் பதவி உயர்வை திரும்பப் பெற்று
விட்டு, வேறு ஒருவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதே போன்று எனக்கு தலைமை ஆசிரியர் பணிக்காக வழங்கப்பட்ட சம்பளத்தை
பிடித்தம் செய்ய 10.4.2013 அன்று உதவி தொடக்க கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
இணையானது
நான், 1984–ம் ஆண்டு 3 ஆண்டு டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் முடித்துள்ளேன்.
எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்கள் 3 ஆண்டு டிப்ளமோ படித்து இருந்தால்
அவர்கள் பிளஸ்–2 படிக்கத் தேவையில்லை என்றும், அதுபோன்று 3 ஆண்டு டிப்ளமோ
படிப்பு, பிளஸ்–2வுக்கு இணையானதாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அரசு
18.12.2012 அன்று உத்தரவிட்டுள்ளது. நான், ஏற்கனவே 3 ஆண்டு டிப்ளமோ
முடித்துள்ளதால் பிளஸ்–2 முடிக்காமல் பி.லிட் படித்துள்ளதாக கூற முடியாது.
எனவே, பிளஸ்–2 முடிக்காமல் பி.லிட் படித்ததாக கூறி தலைமை ஆசிரியர் பதவி
உயர்வை திரும்பப் பெற உத்தரவிட்ட கல்வி அதிகாரியின் நடவடிக்கையையும்,
சம்பளத்தை பிடித்தம் செய்ய பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்.
எனக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ரத்து
இந்த மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஞானகுருநாதன் ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு வழங்கப்பட்ட தலைமை ஆசிரியர் பதவி
உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று உத்தரவிட்ட கல்வி அதிகாரியின்
நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், சம்பளத்தை பிடித்தம்
செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment