இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 25 சதவீத இடஒதுக்கீட்டு
இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என, பல மாதங்களாக,
கல்வித்துறை அதிகாரிகள், வாய்வலிக்க பிரசாரம் செய்த போதும், அதை, பள்ளி
நிர்வாகங்கள், சட்டை செய்யவில்லை.
ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ்,
ஒவ்வொரு தனியார் பள்ளியும், ஆரம்பநிலை சேர்க்கை வகுப்பில் உள்ள மொத்த
இடங்களில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிந்த
பிரிவினருக்கு, ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை, வெளிப்படையாக வெளியிட்டு, விண்ணப்பங்களை வழங்க
வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகள், பல மாதங்களாக, மாவட்டந்தோறும்
கூட்டங்களை நடத்தி, தனியார் பள்ளிகளிடம் பிரசாரம் செய்தனர்.
ஆனால், இதை எதையுமே காதில் வாங்காமல், சென்னை உள்ளிட்ட மாநகராட்சி
நகரங்களில் உள்ள, பெரிய மெட்ரிகுலேஷன் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளி
நிர்வாகங்கள், மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து விட்டன.
இந்த பள்ளிகள் மீது, கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. சி.பி.எஸ்.இ.,
உள்ளிட்ட எந்தப் பள்ளிகளாக இருந்தாலும், சட்ட விதிமுறைகளை
அமல்படுத்துகிறதா என்பதை கண்காணிக்கவும், மீறினால் நடவடிக்கை எடுக்கவும்,
மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அப்படியிருந்தும், விதிமுறைகளை மீறும்
பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது.
இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில் உள்ள பள்ளிகளாவது, ஆர்.டி.இ.,
சட்டத்தை மதிக்கும் என, கல்வித்துறை எதிர்பார்த்தது. ஆனால், பெரும்பாலான
பள்ளிகள், கல்வித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியதை, சட்டை செய்யவில்லை
என்பதும், அதிகாரிகளின் உத்தரவை, செவிடன் காதில் ஊதிய சங்காகவே எடுத்துக்
கொண்டுள்ளன என்பதும், நேற்று வெட்ட வெளிச்சமானது.
நேற்று முதல், வரும் 9ம் தேதி வரை, விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என,
தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள
பல மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளிலும், நேற்று
முன்தினமே, விண்ணப்பங்களை வழங்கினர். இதர பள்ளிகளில், நேற்று முதல்,
விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பள்ளி வாசலில், "அட்மிஷன் நடக்கிறது" என்ற வாசகம், வழக்கம்போல், கொட்டை
எழுத்துக்களில், விளம்பரம் செய்துள்ள பள்ளி நிர்வாகங்கள், இடஒதுக்கீட்டின்
கீழ், விண்ணப்பம் வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.
சைதாப்பேட்டையில் உள்ள பிரபலமான ஒரு தனியார் பள்ளியில், ஏராளமான
பெற்றோர், விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர். அந்த பள்ளி முன்,
இடஒதுக்கீட்டின் கீழ், விண்ணப்பம் வழங்குவது குறித்து, எந்த அறிவிப்பும்
இல்லை.
மேலும், விண்ணப்பங்களை வழங்கிக் கொண்டிருந்த ஊழியர்களிடம் கேட்ட போது,
"இடஒதுக்கீடா... அதெல்லாம் எங்களுக்கு தெரியாது" என, கூலாக கூறினர்.
பெற்றோர்களும், இட ஒதுக்கீடு விண்ணப்பங்கள் குறித்து அறியவில்லை. தெரிந்த
பெற்றோர்களும், அதைப்பற்றி பேச தயங்குகின்றனர்.
ஒரு பெற்றோர் கூறுகையில், "25% இடஒதுக்கீட்டின் கீழ், பள்ளிகள்
விண்ணப்பங்களை வழங்கினாலும், இடம் கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம்
கிடையாது. இடஒதுக்கீட்டின் கீழ், சீட் கொடுப்பதற்கு, பள்ளி நிர்வாகங்கள்
விரும்பாத போது, நாம் விண்ணப்பித்தால், எதுவும் நடக்கப்போவதில்லை.
குழந்தைக்கு, சீட்டும் கிடைக்காது" என, புலம்பினார்.
தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ஆய்வு செய்ய, அவ்வப்போது,
அதிகாரிகள், மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கின்றனர். ஆனால், 25 சதவீத
இடஒதுக்கீடு என்ற முக்கிய அம்சத்தை, பள்ளி நிர்வாகங்கள் அமல்படுத்துகிறதா
என்பதை ஆய்வு செய்ய, கல்வித்துறை முன் வராதது, பெற்றோர் மத்தியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment