"ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், 2015 மார்ச் 31ம்
தேதிக்குள் தேர்ச்சி பெற வேண்டும். இல்லாதபட்சத்தில், ஏற்படும் காலிப்
பணியிடங்களில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும்.
மனுதாரர்களுக்கு, கல்வி அதிகாரிகள் தற்காலிக அங்கீகாரம் வழங்க வேண்டும்" என
மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
சிவகாசி ஜெயசாந்தி, "ஆசிரியர்
தகுதித் தேர்விலிருந்து (டி.இ.டி.,) விலக்கு அளிக்க வேண்டும்" எனவும்,
மதுரை மதி, "தன் ஆசிரியர் பணி நியமனத்தை, அரசு அங்கீகரிக்க வேண்டும்"
எனவும் மனு செய்தனர். பல்வேறு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் சில
ஆசிரியர்கள் 32 மனுக்கள் வரை தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் உத்தரவு: மனுதாரர்கள், கல்வித்
தகுதிக்கு உட்பட்டு 2010 அக்.,1ல் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறவில்லை. இலவச மற்றும் கட்டாயக் கல்வி
உரிமைச்சட்டம் 2010 ஏப்.,1 முதல் அமலானது. இதன்படி, அனைத்து ஆசிரியர்களும்,
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) 2012 ஜூலை 12ல் நடத்திய தகுதித்
தேர்வில், முதல்தாள் மற்றும் இரண்டாம் தாள் எழுத 7 லட்சத்து 14 ஆயிரத்து
526 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்கள் 2448 பேர். தேர்ச்சி சதவீதம்
0.34. இந்த 1 சதவீத தேர்ச்சி என்பது கவலையளிக்கிறது.
சிறப்புத் துணைத் தேர்வு 2012 அக்.,14 ல் நடந்தது. முதல் மற்றும்
இரண்டாம் தாள்களை எழுதியவர்கள் 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர். தேர்ச்சி
பெற்றவர்கள் 19 ஆயிரத்து 261 பேர். தேர்ச்சி சதவீதம் 2.9.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வேலை கிடைக்கவில்லை என்ற
நிலை தற்போது இல்லை. அடுத்த தகுதித்தேர்வு 2013 ஆகஸ்டில் நடக்கவுள்ளது.
பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது தகுதித்தேர்வில்,
தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை.
கட்டாயக் கல்விச் சட்டம் அமலானதிலிருந்து, 5 ஆண்டுகளுக்குள்
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். சில மாவட்டங்களில், அரசு உதவி
பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வு தேர்ச்சி பெறாதவர்களை, ஆசிரியர்களாக
நியமித்துள்ளதை, கல்வி அதிகாரிகள் அங்கீகரித்துள்ளனர். அதுபோன்ற உத்தரவுகளை
பள்ளிக்கல்வி இயக்குனர் ரத்து செய்துள்ளார். மாவட்ட கல்வி அதிகாரிகளின்
உத்தரவில் குற்றம் காண முடியாது.
தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களை, ஆசிரியர் பணியிடங்களில்
நியமிக்கக் கூடாது. மனுதாரர்கள் 2015 மார்ச் 31 க்குள் தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும். இல்லாத பட்சத்தில், ஏற்படும் காலிப்பணியிடங்களில்,
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும்.
மனுதாரர்களுக்கு , கல்வி அதிகாரிகள் தற்காலிக அங்கீகாரம் வழங்க
வேண்டும். இந்த இடைக்கால உத்தரவு, இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.
விசாரணை ஜூன் 24 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment