மதுரை, அருப்புக்கோட்டை ரோடு, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல்
கல்லூரியில், "மாணவ இயக்குனர் 13"க்கான, ஐந்து நாட்கள் குறும்பட தயாரிப்பு
பயிற்சி முகாம், நேற்று துவங்கியது.
மாநில அளவில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான இந்த பயிற்சி முகாம்,
"தினமலர்" மற்றும் கல்லூரி திரைப்படம் மற்றும் தொலைகாட்சித் துறை சார்பில்
நடத்தப்படுகிறது. நேற்று துவங்கிய முகாமில், விரிவுரையாளர் ரகுகாளிதாசன்
வரவேற்றார்.
பயிற்சியை துவக்கி வைத்து, கல்லூரித் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி
பேசியதாவது: ஒரே நாளில் கோடீஸ்வரனாக முடியாது. ஒரு மரம், ஒரே நாளில், 50
அடி உயரம் வளருமா? உழைத்தால் தான் பணம் வரும். உழைப்பு வீண் போகாது.
சம்பாதிப்பதோடு, நாட்டுப் பற்றும் வேண்டும். "மீடியா"வில் உண்மையை வெளிக்
கொணரும் தைரியம் வேண்டும்.
இந்தியாவில், 560 சானல்கள் உள்ளன. எனவே வேலைவாய்ப்புகள் மிகுதியாக
உள்ளன. எங்கே வேலை கிடைக்கிறதோ, அங்கே செல்ல வேண்டும். அதற்கேற்ப, மனநிலையை
தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க
வேண்டும். நினைப்பதை, பேசுவதை, செயல்படுத்த வேண்டும்.
இங்கு, பி.எஸ்சி., டெலிவிஷன் மூன்றாண்டு கால பட்டப்படிப்பு உள்ளது.
படிப்பதற்கு கல்விக் கடனுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. படிக்கும்
காலத்தில், படிப்பைத் தவிர, வேறு சிந்தனை கூடாது. வேலை கிடைப்பதற்கேற்ப,
தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் பேசுகையில், "ஐந்து நாட்கள் பயிற்சியில்,
கேமரா கையாளுதல், வசனம் எழுதுதல், படம்எடுத்தல், "எடிட்டிங்" அனைத்தும்
கற்றுத் தரப்படும். தேர்ந்த இயக்குனராய் வெளியே செல்லலாம். அனைத்துமே
இலவசமாக கற்றுத் தரப்படுகிறது" என்றார்.
சினிமா இணை இயக்குனர்கள் சக்திவேல், மணிகண்டன், வெங்கடேஷ், சுப்புராமன்,
ரமேஷ் பயிற்றுனர்களாக பங்கேற்றனர். விரிவுரையாளர் வளர்மதி நன்றி கூறினார்.
ஏப்., 5 வரை பயிற்சி நடக்கிறது.
No comments:
Post a Comment