ரயில்களில் கொண்டு செல்லப்படும் எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த மாதம், 27ம் தேதி, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு
துவங்கியது. தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும்
இரண்டாம் தாள், கணக்கு ஆகிய, நான்கு தேர்வுகள் முடிந்துள்ளன. இன்று
அறிவியல் தேர்வு நடக்கிறது.
தமிழகம் முழுவதும், 3,012 தேர்வு மையங்களில், 5 லட்சத்து, 43 ஆயிரத்து,
152 மாணவர்கள், 5 லட்சத்து, 25 ஆயிரத்து, 686 மாணவியர் என, மொத்தம், 10
லட்சத்து, 68 ஆயிரத்து, 838 பேர் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வு முடிந்த
பின், விடைத்தாள்கள், எந்தெந்த மாவட்டத்துக்கு என்று, நிர்ணயம்
செய்யப்பட்டுள்ள, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு
செல்லப்படுகின்றன. பெரும்பாலும், ரயில் மெயில் சர்வீஸ் மூலம்
அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த, 28ம் தேதி, தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்கள்,
விருத்தாசலத்தில் இருந்து, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கொண்டு
செல்லப்பட்ட போது, கீழே விழுந்து சேதமடைந்தது.
அதுபோல், செஞ்சி அருகே, சத்தியமங்கலத்தில், 221 ஆங்கிலத் தேர்வு
விடைத்தாள்கள் மாயமானது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்பிரச்னை,
தமிழக சட்டசபையில் எதிரொலித்தது. எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள்களுக்கு உரிய
பாதுகாப்பு வழங்கவும், போக்குவரத்தின் போது, கவனமாகக் கையாளவும், அரசு
உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, ரயில்கள் மூலம் அனுப்பப்படும், விடைத்தாள்களுக்கு, போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விடைத்தாள் பார்சல்களை ரயில்களில் ஏற்றும்
போதும், இறக்கும் போதும், ரயில்வே போலீசார் கண்காணிக்கத் துவங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment