சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த
மசோதா, சட்டசபையில் நேற்று, அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், பல்கலை
நிர்வாகத்தை, ஒட்டு மொத்தமாக, அரசு தன் வசம் கொண்டு வருகிறது. இதற்கு ஏற்ப,
சட்ட திருத்த மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம், அண்ணாமலை
பல்கலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக, ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக்
குழு மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில்,
பல்கலையின் வரவு - செலவு மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளை, அரசின் தணிக்கைக்
குழு ஆய்வு செய்தது. "பல்கலையில் முறைகேடுகள் நடந்துள்ளது" என, தணிக்கைக்
குழு, அரசுக்கு அறிக்கையை அளித்தது. இதைத் தொடர்ந்து, பல்கலைக்
கழகத்துக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவதாஸ் மீனாவை, சிறப்பு அலுவலராக, தமிழக
அரசு நியமித்தது. மேலும், முறைகேடுகளுக்கு காரணமாக இருந்ததாக, அண்ணாமலை
பல்கலையின் துணைவேந்தர் ராமநாதனை, கவர்னர், "சஸ்பெண்ட்" செய்தார். இந்த
நிலையில், அண்ணாமலைப் பல்கலையை அரசு ஏற்க, சட்டசபையில் நேற்று சட்ட திருத்த
மசோதாவை அறிமுகம் செய்தது. உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கொண்டு
வந்துள்ள அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
1928ல் துவங்கியது
சிதம்பரம் அருகே கல்லூரிகளை நிறுவி, அண்ணாமலை செட்டியார்
நடத்தி வந்தார். ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருத மொழிகளில், உயர்கல்வி
போதிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களை, அதனுடன் சேர்ந்த சொத்துக்களுடன்
உள்ளாட்சி அமைப்பிடம், 1928ல் அண்ணாமலை செட்டியார் ஒப்படைத்தார். அண்ணாமலை
நகருக்குள், கற்பிக்கும் மற்றும் தங்கி படிக்கும் பல்கலைக் கழகத்தை நிறுவி,
பராமரிக்க, 20 லட்சம் ரூபாயையும் வழங்க சம்மதித்து, அவருடைய வாரிசுகள்,
சில அதிகாரங்கள் மற்றும் சலுகைகள் பெற உரிமை உடையவர்கள் என, ஒப்புக்
கொண்டுள்ளார்.
தனி சட்டம்
தமிழகத்தில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க,
தமிழக சட்டத்தின் கீழ், அண்ணாமலை பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. அதன்
தோற்றுனரான, அண்ணாமலை செட்டியார் அங்கீகரிக்கப்பட்டார். அண்ணாமலை
செட்டியாரும், அவரது வாரிசுகளும், அண்ணாமலை பல்கலையில், அதிகாரங்கள்
மற்றும் சலுகைகளை பெற்று வந்தனர். நிறுவனர், பல்கலையின் இணை வேந்தராகவும்,
அலுவலராகவும் செயல்படுகிறார்.
நியமனங்கள்
பல்கலையின் துணை வேந்தரை தேர்வு செய்ய, மூன்று பெயர்களை,
கவர்னருக்கு நிறுவனர் பரிந்துரைக்கிறார்; அவர்களில் ஒருவர், துணை வேந்தராக
நியமிக்கப்படுகிறார். பல்கலையின் எழுத்தர் மற்றும் பிற ஊழியர்களை, துணை
வேந்தர் நியமிக்கிறார். ஆசிரியர், பதிவாளர் போன்ற பதவிகளுக்கு தேர்வு
செய்ய, தேர்வு வாரியம் உள்ளது. இதில், நிறுவனர் மற்றும் துணை வேந்தர்
உறுப்பினர்கள், நிறுவனரின் விருப்பத்தை நிறைவேற்றும் நபராகவே, துணை வேந்தர்
உள்ளார். நிறுவனர் பதவி, வாரிசு அடிப்படையில், வாழ்நாள் முழுவதும்
வகிக்கக் கூடிய பதவியாக உள்ளது. பல்கலைக் கழகம், நிறுவனர் என்ற தனி நபர்
பரிந்துரை செய்யும் துணை வேந்தரால் நிர்வகிக்கப்படுகிறது. இச்சலுகையை,
அனைவருக்கும் உரிமை என்ற கொள்கை படி ஏற்க இயலாது; சிறந்த நிர்வாகத்துக்கும்
இது, எதிராக உள்ளது.
முறைகேடு
பல்கலைக் கழகத்தில், 2012 நவம்பரில், ஆட்குறைப்பு மற்றும்
ஊதியம் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை எதிர்த்து, ஆசிரியர், ஆசிரியர்
அல்லாதோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, பல்வேறு போராட்டங்களில்
ஈடுபட்டன. பல்கலையில் நிலவிய அமைதியின்மையால், தேர்வுகள் தள்ளி போயின.
பல்கலைக்கு ஆண்டுதோறும், பல கோடி ரூபாய் நிதியை அரசு வழங்கியும், எப்போதும்
இல்லாத, நிதிச் சுமையை சந்தித்து வருகிறது. தேவைக்கு அதிகமான ஊழியர்களை
நியமித்தது; பிற நோக்கங்களுக்காக, பல்கலை நிதியை பயன்படுத்தியது;
சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதது ஆகியவையே இதற்குக் காரணம்.
மாணவர்கள், பணியாளர்கள் நலனை பாதுகாக்க, பல்கலையின் நிதி மற்றும் பிற
முறைகேடுகளை தணிக்கை செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, ஒரு நபர் உள்ளாட்சி
நிதி தணிக்கைக் குழுவை, அரசு அமைத்தது. தணிக்கைக் குழுவின் அறிக்கை
அடிப்படையில், உரிய பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க, உயர்மட்டக் குழுவையும்,
அரசு அமைத்தது.
சட்ட திருத்தம்
அண்ணாமலை பல்கலை சட்டம், மாநிலத்தில் உள்ள, பிற பல்கலைக்
கழகங்களின் சட்டங்களுடன் ஒத்திருக்கவில்லை. பல்கலையின், நிறுவனருக்கு அதிக
அதிகாரங்கள், சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. பல்கலையின் சீர்கேடான
நிர்வாகத்துக்கு, இதுவே காரணம். பல்கலையின், பிற அதிகார அமைப்புகளுக்கு
உரிய பங்களிப்பு தேவைப்படுகிறது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர்
வாழ்வாதாரங்களை, பாதுகாக்கும் சமுதாய கட்டுப்பாடு, அரசுக்கு உள்ளது.
மேலும், மாணவர்களுக்கு உயர்கல்வி அளிப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.
எனவே, அண்ணாமலை பல்கலையின், சட்டத்தை, பிற பல்கலைக் கழகங்களுக்கு இணையாக
மாற்ற முடிவு செய்து, சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு,
பழனியப்பன் கூறியுள்ளார்.
குடும்ப அதிகாரம் முடிவுக்கு வந்தது
அண்ணாமலை செட்டியார் குடும்ப வாரிசுகள், 85 ஆண்டுகளாக
அனுபவித்து வந்த, பல்கலை இணை வேந்தர் பதவி பறிக்கப்படுகிறது. சட்ட
திருத்தத்தில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது: பல்கலையின் வேந்தராக
கவர்னரும், இணை வேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சரும் இருப்பர். துணை
வேந்தரை தேர்வு செய்யும் குழு, பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை, துணை
வேந்தராக, கவர்னர் நியமிப்பார். பல்கலையின், அதிகார அமைப்புகள் எதிலும்,
உறுப்பினராக அவர் இருக்கக் கூடாது. துணை வேந்தர், பல்கலையின் கல்வித்
தலைவராகவும், முதன்மை நிர்வாக அலுவலராகவும் செயல்படுவார். கல்வி மன்றம்,
நிதிக் குழு, ஆட்சிக் குழுஆகியவற்றின் தலைவராகவும் இருப்பார்.
இக்குழுக்களின் அனுமதிப்படி, பல்கலையின் நியமனங்களை, துணை வேந்தர்
மேற்கொள்வார். இவ்வாறு சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து,
பல்கலையின் நிறுவனர் என்ற அடிப்படையில், அண்ணாமலை செட்டியார்
குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள், சலுகைகள் பறிக்கப்படுகின்றன.
"ஜாக்" கூட்டமைப்பு வரவேற்பு
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்றுள்ளதற்கு, இப்பல்கலைக் கழக ஆசிரியர் - ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்) வரவேற்பு தெரிவித்துள்ளது.
அண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர் - ஊழியர் சங்கங்களின்
கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்) தலைவர் மதியழகன்: அண்ணாமலை பல்கலைக் கழகத்தை
அரசு ஏற்றுள்ளதற்கு, எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல,
பல்கலைக் கழகத்தில் பணிபுரியும், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட, 12,500
பணியாளர்களுக்கும், முழு பணி பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும். அண்ணாமலை
பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையையும்
அரசு ஏற்க வேண்டும். அதை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றி, பொதுமக்களின்
பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாடு பல்கலைக் கழக ஆசிரியர் சங்க மாநில செயலர்
பிச்சாண்டி: தனியார் பல்கலைக் கழகத்தை அரசு ஏற்றது இதுவே முதல் முறை.
அரசின் முற்போக்கான முடிவு வரவேற்கத்தக்கது. அரசு விதிமுறைகளுக்கு
புறம்பாக, சில அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளும் செயல்படுகின்றன.
இக்கல்லூரிகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகில இந்திய பல்கலைக் கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்
கூட்டமைப்பு தேசிய செயலர் ஜெயகாந்தி: அரசின் முடிவை, நாங்கள் ஒருமனதாக
வரவேற்கிறோம். சரியான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட நல்ல முடிவு.
ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் உள்ள குறைபாடுகளை களையும்
நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
நிர்வாக தரப்பில் கலக்கம்
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட, நிதி
நெருக்கடி காரணமாக உண்டான குளறுபடியைத் தொடர்ந்து, பல்கலையை, அரசு
பல்கலையாக மாற்ற, சட்டசபையில், சட்ட திருத்த மசோதாவை, உயர் கல்வி அமைச்சர்
பழனியப்பன், தாக்கல் செய்தார். இது, அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாக
தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்கலைக் கழகத்தில் நிர்வாக தரப்பில்
உள்ள அதிகாரிகள், பதிவாளர், துறை முதல்வர்கள், துணைப் பதிவாளர், உதவி
பதிவாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட, நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள்
சோகமாக காணப்பட்டனர். அரசின் நடவடிக்கை குறித்து, நிர்வாக தரப்பில்,
"தினமலர்" நாளிதழ் நிருபர் பேட்டி காண அணுகிய போது, "பிளீஸ் வேண்டாம்
சார்..." என, மறுத்து விட்டனர்.
பல்கலை ஊழியர்கள், மாணவர்கள் வரவேற்பு
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசு பல்கலைக்
கழகமாக மாற்ற சட்டசபையில் சட்ட திருத்த மசோதாவை உயர் கல்வி அமைச்சர்
பழனியப்பன் தாக்கல் செய்தார். இது குறித்து பல்கலை ஊழியர்கள் மற்றும்
மாணவர்களின் கருத்து இதோ...
அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆசிரியர், ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்) உதய சந்திரன்: வரலாற்று துறை உதவி பேராசிரியர், பேராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை, அரசு பல்கலைக் கழகமாக மாற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை, பல்கலைக் கழக ஆசிரியர், ஊழியர் சங்கம் வரவேற்கிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் படித்து முன்னேற்றமடைய உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகம் சீர்கெடுவதைத் தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மதியழகன், பேராட்டக் குழு துணை ஒருங்கிணைப்பாளர், பல்கலைக்
கழக ஆசிரியர், ஊழியர் சங்கத் தலைவர்: அரசு நடவடிக்கை பல்கலைக் கழக
ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை வரவேற்கிறோம்.
ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு ஏற்பாடாமல் இருக்க எடுத்த நடவடிக்கைக்கு
நன்றி. அரசு சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரவி, பல்கலைக் கழக ஊழியர் சங்கத் தலைவர் : கடந்த 6
மாதங்களாக ஊழியர்கள், ஆசிரியர்கள் வாழ்வாதாரத்திற்கு நிம்மதி இழந்து
வீதியில் நின்று போராடினோம். அதற்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது. அரசு
சரியான முடிவை எடுத்துள்ளதற்கு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரவேற்கிறோம். ஆள்
குறைப்பு, ஊதியம் குறைப்பு இல்லை என அறிவித்துள்ளது மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் பேட்டி
இமயன், 2ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.,: அரசின் இந்த நடவடிக்கையை
நாங்கள் வரவேற்கிறோம். அரசு பல்கலைக்கழகமாக மாற்றினால் அரசு, குறைந்த
கட்டணம் நிர்ணயிக்கும். எங்களுக்கும் கட்டணம் கட்ட வசதியாக இருக்கும்.
கல்வியும் தரமாக இருக்கும். சமூகத்தில் எங்களுக்கும் சம அந்தஸ்து
கிடைக்கும். எதிர்காலத்தில் மருத்துவக் கல்லூரி நல்ல முறையில் செயல்படும்
என நம்புகிறோம்.
பிரசாந்த், 3ம் ஆண்டு இன்ஜினியரிங்: அரசு பல்கலைக் கழகமாக
மாற்ற நடவடிக்கை குறித்து எங்களுக்குத் தெரியாது. அரசு பல்கலைக் கழகமாக
மாற்றப்பட்டால் அதனை அனைவரும் வரவேற்போம். இதனை கேள்வி பட்டவுடன்
மகிழ்ச்சியாக உள்ளது. கட்டணம் குறையும், தரமான கல்வி கிடைக்கும்.
சின்ன துரை, 3ம் ஆண்டு இன்ஜினியரிங்: அரசின் முடிவுக்கு
மாணவர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள்,
ஊழியர்கள் சங்கங்களுக்கும். பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும் இடையே கருத்து
ஒற்றுமை இல்லாதததால் அடிக்கடி போராட்டம் நடக்கிறது. இதனால் பாடங்கள்
முடிக்க முடியாமல் மாணவர்கள் கல்வியில் பாதிக்கப்படுகின்றனர். இந்த
நடவடிக்கையால் மற்ற கல்லூரி மாணவர்களுக்கு நிகரான அந்தஸ்தை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment