"நூலகங்களில், புதிதாக, ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க, மாவட்ட நூலக
அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை
செல்வன் வலியுறுத்தினார்.
நூலகத் துறை இயக்குனரகம் சார்பில், மாவட்ட நூலக அலுவலர்களுக்கான ஆய்வுக்
கூட்டம், டி.பி.ஐ., வளாகத்தில் நடந்தது. பள்ளிகல்வி அமைச்சர் வைகை செல்வன்
தலைமையில் நடந்த கூட்டத்தில், கல்வித் துறை செயலர் சபிதா, நூலகத்துறை
இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் மாவட்ட நூலக அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.
கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது: புத்தகங்கள் இருப்பு குறித்து
சரிபார்த்து, இருப்பு குறைந்துள்ள புத்தகங்கள் பற்றி கணக்கெடுக்க வேண்டும்.
இந்த வகை புத்தகங்களை, கூடுதலாக கொள்முதல் செய்து, நூலகங்களில் வைக்க
வேண்டும்.அனைத்துப் பள்ளிகளிலும், வரும் 23ம் தேதி, உலக புத்தக தினத்தை
கொண்டாட வேண்டும்.
உலக புத்தக தினமான, வரும், 23ம் தேதியில் இருந்து, மே 22ம் தேதி வரை,
புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக
உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்டங்களை கவுரவிக்க, விருது வழங்கப்படும்.
மேலும், நூலகங்களில், புரவலர்களையும், அதிகளவில் சேர்க்க வேண்டும்.
1,000 ரூபாய் வழங்குபவர்கள், புரவலர்களாகவும், 10 ஆயிரம் ரூபாய்
வழங்குபவர்கள், கொடையாளிகளாகவும் சேர்க்க வேண்டும்.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு, தாலுகா அளவில், வாசகர்களிடையே கட்டுரைப்
போட்டியை நடத்தி, முதல் மூன்று இடங்களைப் பெறும் வாசகர்களுக்கு, பரிசு
வழங்க வேண்டும். நூலகங்கள் இல்லாத கிராமப்புற பகுதிகளை கண்டறிந்து, அங்கு,
பகுதி நேர நூலகங்களை துவங்கவும், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு
அமைச்சர் பேசினார்.
No comments:
Post a Comment