"மலைவாழ் மக்களிடம், உயர்கல்வியை கொண்டு செல்லும் வகையில், மழைவாழ்
பகுதியில், தொலைதூரக் கல்வி உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்" என, இக்னோ
சென்னை மண்டல இயக்குனர் அசோக்குமார் கூறினார்.
இந்திரா காந்தி திறந்தநிலை
பல்கலைக்கழகத்தின், 26வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. இதில், சென்னை
மண்டலத்தில் படித்த, 1,383 மாணவர்களுக்கு, பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில்,
ஒன்பது மாணவர்கள், தங்க பதக்கங்களை பெற்றனர்.
விழாவில், இக்னோ சென்னை மண்டல இயக்குனர் அசோக்குமார் பேசியதாவது: சென்னை
மண்டலத்தில், பி.காம்., - பி.ஏ., - பி.எஸ்சி., உள்ளிட்ட இளங்கலை
படிப்புகளும், எம்.காம்., - எம்.ஏ., உள்ளிட்ட, முதுகலை படிப்புகள் என, 150
படிப்புகள் வழங்கப்படுகின்றன.
சென்னையில், 106 படிப்பு மையங்களும் செயல்படுகின்றன. இதில், 8,000க்கும்
மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். பி.எட்., படிப்பில், ஒவ்வொரு
ஆண்டும், 2,600 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதில், 80 சதவீதம்
மேற்பட்டோர் பெண்கள்.
நகர்ப்புறங்களில் இக்னோவில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை
அதிகரித்துள்ள நிலையில், கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வு இல்லை. இதை
களையும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்தில், மாதிரி கிராம பயிற்சி மையங்கள்
அமைக்கப்பட உள்ளன.
அனைத்து மத்திய சிறைகளில் உள்ள கைதிகள் அனைவரும், எந்தவித கட்டணமின்றி
இலவசமாக படிக்கும் வகையில், இலவச கல்வியும், இக்னோ சார்பில் அளிக்கப்பட
உள்ளது. இதற்காக பணிகள் நடந்து வருகின்றன. அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி
கிடைக்காத மலைவாழ் மக்களிடம், கல்வியை கொண்டு செல்லும் வகையில், தொலை தூரக்
கல்வி உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்கள் மலைவாழ் மக்களிடம், உயர் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து
மழைவாழ் மக்கள் படிக்க ஊக்குவிப்பர். தமிழகத்தில், சேலம், ஈரோடு
மாவட்டங்களில் உள்ள மலைவாழ் பகுதியில் தற்போது பணிகள் மும்முரமாக நடந்து
வருகின்றன. இவ்வாறு, அசோக்குமார் கூறினார்.
No comments:
Post a Comment