தமிழகம் முழுவதும் ஏராளமான கல்லூரிகள் விற்பனை
செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவை மண்டலத்தில் சுமார் 15 கல்லூரிகள்
விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இன்ஜினியரிங் கல்லூரிகள்
ஆகும். இதனால் கல்லூரி உரிமையாளர்கள் ஆகும் ஆசையில் ஏராளமானோர் தமிழகத்தை
நோக்கி படை எடுத்து வருகின்றனர்.
கல்லூரி விற்பனை ஏன்? :
பொருளாதார நெருக்கடி, குறைவான மாணவர் சேர்க்கை மற்றும் கல்லூரியை நடத்துவதற்காக ஆகும் அதிகளவிலான செலவு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் உள்ள ஏராளமான கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 100 கல்லூரிகள் இதே போன்ற பிரச்னைகளில் சிக்கி தவித்து வருவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இன்ஜினியரிங் கல்லூரிகளில் பாதி இடங்களை நிரப்புவதற்கே கல்லூரிகள் பெரும்பாடுபட்டு வருகின்றன. இதனால் கல்லூரி உரிமையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையே இழுபறியும் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. சில அறிவியல் மற்றும் கலை கல்லூரிகளும் இந்த விற்பனை பட்டியலில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வி நிறுவனங்களுக்கான விற்பனை தொகை ரூ.50 கோடியில் இருந்து 100 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளை நேரடியாக விற்பனை செய்வது தங்களின் மீதான நம்பகதன்மையை பாதிக்கும் என்பதால் கல்லூரி உரிமையாளர்கள், தரகர்கள் மற்றும் ஏஜன்ட்கள் மூலம் விற்பனையை நடத்தி வருகின்றனர்.
கல்வியாளர்கள் கருத்து :
இது
தொடர்பாக கருத்து தெரிவித்த அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர்
ஈ.பாலகுருசாமி, தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் பிற
கல்லூரிகள் விற்பனை அதிகரித்து வருகிறது; அவர்களிடம் போதிய மாணவர் சேர்க்கை
இல்லை; மாணவர்கள் இல்லை என்றால் அவர்களுக்கு வருமானம் எப்படி கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைகழகத்துக்கு உட்பட்ட கோவை
மேலாண்மை கல்லூரிகள் கூட்டமைப்பின் இணை செயலாளர் டி.டி.ஈஸ்வரமூர்த்தி
கூறுகையில், ஒரு நிறுவனத்தினை இயக்குவதற்கான விதிமுறைகள் கடுமையாக
இருப்பதால் கல்வி நிறுவனங்களை இயக்குவது மிகவும் சிரமமாக உள்ளதும் இது
போன்ற பிரச்னைகள் உருவாவதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
காலியாக உள்ள கல்லூரிகள்:
நடைமுறை செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக கடந்த ஆண்டு அரசு கோட்டாவின் கீழ்
வரும் 45,000 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாக அனைத்திந்திய தொழிற்கல்வி
கழகம் தெரிவித்துள்ளது. போதிய அளவில் மாணவர் சேர்க்கை இடங்கள்
நிரப்பப்படாததால் சில இன்ஜினியரிங் கல்லூரிகளின் உரிமங்கள் ரத்து
செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 71 கல்வி நிறுவனங்களுக்கு இது
தொடர்பாக நோட்டீசும் அனுப்பபட்டது. பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் 50
சதவீதத்திற்கும் அதிகமான மாணவர் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வருகின்றன.
2010ல் ஏஐசிடிஇ 180 இன்ஜினியரிங் சீட்களுக்கும், 120 பிற கல்லூரி
சீட்களுக்கும் அனுமதி அளித்தது. இது 2011ல் 1.5 லட்சம் சீட்களாகவும்,
2012ல் 2.25 லட்சம் சீட்களாகவும் அதிரடியாக உயர்ந்தது. நிகழ்நிலை
பல்கலைக்கழகங்கள் தங்களின் கிளைகளை அதிகளவில் விரிவுபடுத்தியதும் மாணவர்
சேர்க்கை சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது.
சரியும் கோவை மதிப்பு :
கல்வி தரத்திற்கு புகழ்பெற்ற கோவை மண்டலத்தில் கல்லூரிகள் மூடப்பட்டு வருவது அப்பகுதியின் புகழை பெரிதும் பாதித்துள்ளது. தற்போது நிறைவடைந்த மாணவர் சேர்க்கை காலகட்டத்தில் 50,000 இன்ஜினியரிங் சீட்களில் 10,000 சீட்கள் காலியாக இருந்தது. பிரச்னைகள் இருந்த போதும் பெரும்பாலான புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை விற்பனை செய்ய தயாராக இல்லை. இனிவரும் காலங்களில் தாங்கள் கல்லூரியை விரிவுபடுத்த போவதாகவும், வேறு ஒருவரிடம் ஒப்படைப்பதில் எந்த பலனும் இல்லை எனவும் அந்நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. ஏராளமானோர் கல்வியை வியாபாரமாக செய்வதாகவும், தாங்கள் அதற்கு தயாராக இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment