குமரி மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலையை கண்டறிய
திறனறி தேர்வு அனைவருக்கும் கல்வி இயக்கம் வாயிலாக நடத்தப்பட உள்ளது என்று
கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
திறனறி தேர்வு நடத்துவதற்காக அமைக்கப்பட்ட
குழுவினருடன் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் நாகராஜன் தலைமையில்
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு
பின்னர் கலெக்டர் நாகராஜன் கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலையை கண்டறிந்து அவர்களது திறனை அதிகரிக்க செய்யும் நடவடிக்கையாக திறனறி தேர்வு நடத்தப்பட உள்ளது. திறனாய்வு மேற்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் பணிபுரியும் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர்கள் தலைமையில் 5 நபர்கள் கொண்ட 21 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கும் சென்று ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறனறி தேர்வுகளை நடத்துகின்றனர்.
1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடத்தில் தேர்வுகள் நடைபெறுகிறது. தமிழ் பாடத்தில் வாசிக்கும் திறன், எழுதும் திறன், இதழ்கள் வாசித்தல் மற்றும் வாக்கியம் உச்சரிக்கும் திறன்களும் கண்டறியப்பட உள்ளது. கணித பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படை கணக்குகள் செய்யும் திறன் கண்டறியப்பட உள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிக்கும் திறன், எழுதும் திறன், அறிவியலின் அடிப்படையான அறிவு, சமூக அறிவியல், மனவரைபடம் வரைதல், வரைபடம் குறித்தல் திறன்களும் கண்டறியப்பட உள்ளது.
ஒரு மேல்நிலை பள்ளி அல்லது உயர்நிலை பள்ளியை சுற்றியுள்ள தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தேர்வுகள் நடத்தப்பட்ட உடன் அதை கணினியில் பதிவுசெய்வதுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்தாய்வு செய்து கற்றல் ஆற்றலை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடைவு திறன் குறைந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் கோடைகால சிறப்பு பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் அனை வருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகன், சப் கலெக்டர் சங்கர்லால் குமாவத், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர்கள், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment