"நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளில், பல்வேறு விதிமீறல்கள்
நடக்கின்றன. கணிதம், அறிவியல் பாடப்பிரிவுகள் மட்டுமே, அங்கு
நடத்தப்படுகின்றன. ஒரு பிரிவில், 80 மாணவர்களுக்கு மேல் சேர்க்கக்கூடாது
என, விதி இருந்தும், அங்கு, 800 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்" என
மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி, அடுக்கடுக்காக பல்வேறு
குற்றச்சாட்டுகளை கூறினார்.
சட்டசபையில், பள்ளிக்கல்வித்துறை,
தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை
ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், நேற்று நடந்தது. விவாதம் வருமாறு:
மார்க்சிஸ்ட்-பாலபாரதி: தமிழகத்தில், சமச்சீர் கல்வி அமல்படுத்தியாகி
விட்டது. அரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், ஒரே வகை பாடத்திட்டம்
தான், அமலில் இருக்கிறது. அப்படியிருக்கும் போது, மெட்ரிகுலேஷன்
பள்ளிகளுக்கு என, தனி இயக்குனரகம் தேவையில்லை. அனைத்து வகை பள்ளிகளையும்,
ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணத்தை விட,
தனியார் பள்ளிகள் அதிக கட்டணங்களை வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. இதை
எதிர்த்து, கோர்ட்டில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
வைகைச்செல்வன்-பள்ளிக்கல்வி அமைச்சர்: தனியார் பள்ளிகள், அதிக கட்டணம்
வசூல் செய்வதில்லை. ஒரு சில பள்ளிகளில், இதுபோன்று நடந்திருக்கலாம்.
அப்படிப்பட்ட பள்ளிகள் மீதும், நடவடிக்கை எடுத்துள்ளோம்.
சென்னை, வேப்பேரியில், செவன்த்டே அட்வெண்டிஸ்ட் பள்ளி, செயின்ட் ஜான்ஸ்
மெட்ரிகுலேஷன் பள்ளி, மதுரையில், மரியான் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவற்றின்
நிரந்தர அங்கீகாரத்தை திரும்ப பெற்று, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலபாரதி: தனியார் பள்ளிகள், பெற்றோர்களிடம், அதிக கட்டணம் வசூலிக்கும்
பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, வங்கிகள் மூலம், நேரடியாக, கல்வி
கட்டணம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
பிளஸ் 2 தேர்வில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாநில
அளவிலான இடங்களை பிடித்துள்ளனர். நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய
மாவட்டங்களைச் சேர்ந்த, குறிப்பிட்ட தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே,
பொதுத்தேர்வுகளில், மாநில அளவிலான இடங்களை பிடிக்கின்றனர். ஆனால், அரசு
பள்ளிகளால், ஏன் இந்த சாதனையை செய்ய முடியவில்லை?
அமைச்சர்: விருதுநகர் மாவட்டம், தொடர்ந்து, 28 ஆண்டுகளாக, முதலிடத்தில்
இருந்து வருகிறது. அரசு பள்ளிகளின் தரம் குறைந்துவிடவில்லை. முந்தைய
தி.மு.க., அரசு தான், கல்வியை கடை சரக்காக மாற்றிவிட்டது. தற்போது, அரசு
பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது; தரமும் உயர்ந்துள்ளது.
பாலபாரதி: நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார்
பள்ளிகளில், பல்வேறு விதிமீறல்கள் நடக்கின்றன. அந்த பள்ளிகளில், 10, 11, 12
ஆகிய வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள
தனியார் பள்ளிகளில், கணிதம், அறிவியல் பிரிவுகளில் மட்டும், 800 மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர்.
வரலாறு, பொருளியல், வணிகவியல், தமிழ் இலக்கியம் உள்ளிட்ட எந்த,
"குரூப்&'களும், அங்கு கிடையாது. மருத்துவம், பொறியியல் படிப்புகளை
மட்டுமே நோக்கமாகக் கொண்டு, அந்த பள்ளிகள் இயங்கி வருவது, இதன்மூலம் வெட்ட
வெளிச்சமாகிறது. இந்த நோக்கம் மிகவும் தவறானது. குறிப்பிட்ட, குரூப்களில்,
800 மாணவர்களை சேர்க்க, அதிகாரிகள் எப்படி அனுமதித்தனர்?
தங்கமணி-தொழில்துறை அமைச்சர்: எனது மகன், அங்குள்ள பள்ளியில்,
தொழிற்கல்வி பிரிவு படிக்கிறார். எனவே, இதர பாடப்பிரிவுகள் அங்கு இல்லை என,
கூற முடியாது.
பாலபாரதி: அரசு பள்ளிகளில், ஒரு பாடப்பிரிவில், 80 மாணவர்களுக்கு மேல்
சேர்க்க அனுமதி இல்லை. அப்படியிருக்கும்போது, 800 மாணவர்களுக்கு அனுமதி
வழங்குவது எப்படி? இந்த பள்ளிகளில், முன்கூட்டியே வகுப்புகள்
நடத்தப்படுகின்றன. இதுபோன்ற பள்ளிகளை, அரசே ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு
விவாதம் நடந்தது.
ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கை ஏற்பு ; கடந்த, 2004ல், அப்போதைய
அ.தி.மு.க., ஆட்சியில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,
தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களை, 2006ல்,
தி.மு.க., அரசு, பணி நிரந்தரம் செய்தது. விடுபட்ட இரு ஆண்டுகளை, "ரெகுலர்"
பணிக்காலமாக மாற்ற வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், பல
ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.
இந்த பிரச்னை குறித்து, பாலபாரதி, நேற்று கேள்வி எழுப்பியதற்கு,
"ஆசிரியர்கள் கோரிக்கை, அரசின் பரிசீலனையில் இருக்கிறது. விரைவில், உரிய
முடிவு எடுக்கப்படும்" என அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.
No comments:
Post a Comment