"மக்கள் மனதில் இடம் பெறும் வகையில், புதிய மாற்றங்கள் கொண்டு வருவேன்"
என யு.பி.எஸ்.சி., தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பெற்ற அருண் கூறினார்.
தேசிய அளவில், ஆறாம் இடமும்,
தமிழக அளவில், முதலிடமும் பெற்று, ஐ.ஏ.எஸ்., பணிக்கு தேர்வு பெற்றுள்ள
சென்னையைச் சேர்ந்த அருண் தம்புராஜ் கூறியதாவது: சொந்த ஊர் மதுரை;
வளர்ந்தது சென்னை. மயிலாப்பூரில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளி படிப்பை
முடித்தேன். பிளஸ் 2வில், நல்ல மதிப்பெண் எடுத்ததால், திருச்சி மருத்துவ
கல்லூரியில படிக்க இடம் கிடைத்தது.
திருச்சி மருத்துவ கல்லூரியிலிருந்து, சென்னை மருத்துவ கல்லூரிக்கு
மாற்றலாகி வந்தேன். சென்னையில் தான் மருத்துவ படிப்பை முடித்தேன். அப்பா,
காவல் துறையில் பணிபுரிபவர் என்பதால், மக்களுக்கான சேவை செய்து குறித்து,
எப்போது வீட்டில் பேசி கொண்டே இருப்பர். அப்பாவின் பேச்சு, மக்களுக்கு சேவை
செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்தியது.
மருத்துவ படிப்பு முடிந்த உடன், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன்;
ஐ.பி.எஸ்., பணியில் தான் இடம் கிடைத்தது. இன்றும், ஐ.பி.எஸ்., தேர்வு
தொடர்பான வழக்கு கோட்டில் உள்ளது. நன்றாக தேர்வு எழுதியும், ஐ.பி.எஸ்.,
பணியில் தான் இடம் கிடைத்ததால், இரண்டு ஆண்டுகளாக, ஐ.ஏ.எஸ்., தேர்வு
எழுதவில்லை.
நண்பர் ரவீந்திரன் அறிவுறுத்தலின் பேரில் தான், மறுபடியும் சிவில்
சர்வீஸ் தேர்வு எழுதினேன். ஆனால், இந்த முறை நானே எதிர்பார்க்காத வகையில்,
முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பெற்றோரே, என் வெற்றிக்கு
காரணம். மக்கள் மனதில் இடம் பெறும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டு
வருவேன். இவ்வாறு, அருண் கூறினார்.
No comments:
Post a Comment