"இன்ஜினியரிங் கல்லூரிகளில், காலத்துக்கு ஏற்றதாக இல்லாத படிப்புகளை
நீக்கிவிட்டு, புதிய படிப்புகளை உருவாக்க, தேசிய அளவில் பொது திட்டத்தை
உருவாக்க உள்ளோம்" என, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர், மான்த்தா கூறினார்.
கோவையில், அவர் கூறியதாவது: அகில
இந்திய அளவில், இன்ஜினியரிங், தொழில்நுட்ப கல்லூரிகள் எண்ணிக்கை, உயர்ந்து
வருகிறது. தென்மாநிலங்களில், தமிழ்நாட்டில் அதிக அளவில் உள்ளன. புதிய
கல்லூரி துவக்குவதை, கட்டுப்படுத்த இயலாது.
மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, கல்வி வளர்ச்சிக்கான அடிப்படை
கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது, கொள்கை முடிவு. இதை அனைவரும்
நிறைவேற்ற வேண்டும்.
ஒரு கல்லூரி துவக்கப்படும்போது, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா, ஆய்வகம், நூலகங்கள் உள்ளனவா என்பதை மட்டுமே, பார்க்க முடியும்.
கல்வியின் தரம் பற்றி, கல்லூரி செயல்படும்போது மட்டுமே அறிந்து கொள்ள
முடியும். அதற்கேற்ற வகையில், மாணவர்களின் சேர்க்கையும் அமையும். எனவே,
இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு, ஆரம்பக்கட்டத்திலேயே, அனுமதி
மறுக்க முடியாது. தரமற்ற கல்லூரிகள், தாமாகவே மூடப்பட்டு விடுகின்றன.
இன்ஜினியரிங் கல்லூரிகளில், அவசியமற்ற சில படிப்புகள் தொடர்கின்றன.
காலத்துக்கு ஏற்ற கல்வியாக, அவை இல்லை. எனவே, சில படிப்புகளை கைவிட வேண்டிய
அவசியம் ஏற்பட்டுள்ளது. அதே போல், புதிய பாடத்திட்டங்களை, தேவையை அறிந்து
உருவாக்க வேண்டும்.
இதற்கென, தேசிய அளவிலான, ஒரு பொது திட்டம் கொண்டு வரப்படும்; முதலில்,
மாநில அளவில் இதற்கான ஆலோசனைகள், பெறப்பட்டு, பல்கலைகளில், அவை பரிசீலனை
செய்யப்படும்.
பின்னர், தேசிய அளவில், அவசியமான பாடத்திட்டங்கள் தேர்வு செய்யப்படும்.
இவற்றை மீண்டும் ஆய்வு செய்து, புதிய பாடங்கள் உருவாக்கப்படும். இவை
தரமிக்கதாகவும், எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் அமையும்.
இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள், தொழில் நிறுனங்களுடன்
இணைந்து செயல்படுபவையாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்துக்காகவே, மூன்று
மாதம் தொழில் நிறுவன பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை, பாடத் திட்டத்தில்
இடம் பெறச் செய்துள்ளோம்.
தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படாத கல்லூரிகள், தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு, மான்த்தா கூறினார்.
No comments:
Post a Comment