வாழ்வில் ஒருவர் பெறும் வெற்றியானது, அவரின் அறிவுத்திறன் அல்லது
கல்லூரியில் அவர் பெறும் மதிப்பெண்களால் மட்டும் நிகழ்வதில்லை. ஒருவரின்
சுயகட்டுப்பாடே, வெற்றியை பிரதானமாக தீர்மானிக்கும் அம்சமாக திகழ்கிறது.
பள்ளிப் படிப்பை முடித்து,
கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் ஒருவர், பல்வேறான
குழப்பங்களுக்கு ஆளாகிறார். தான் படிக்கும் கல்லூரி, சிறந்ததாக இருக்க
வேண்டுமென கருதுகிறார். ஆனால் ஒருவர், எத்தகைய பிரபலம் வாய்ந்த கல்லூரியில்
படிக்கிறார் என்பதைவிட, அவர் அங்கே எதை கற்றுக்கொள்கிறார் மற்றும் எப்படி
கற்றுக்கொள்கிறார் என்பதே முக்கியம்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி,
ஒருவர் வாழ்வில் வெற்றியடைய வேண்டுமெனில், அவருக்கு சுய கட்டுப்பாடு
மிகவும் முக்கியம் என்ற முடிவு கிடைத்துள்ளது. உங்களின் மிதமிஞ்சிய
உணர்வுகளை அடக்கும் சுய கட்டுப்பாட்டு பழக்கமானது, கல்லூரி வாழ்க்கையில்
மட்டுமல்ல, உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முழுவதும், உங்களுக்கு வெற்றியைத்
தரும்.
சுய கட்டுப்பாட்டின் சக்தியை நீங்கள் உணர வேண்டுமெனில், Marshmallow
டெஸ்ட் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். வால்டர் மிஸ்செல் என்ற
உளவியல் நிபுணரால், கடந்த 1972ம் ஆண்டு, ஸ்டான்போர்டு பல்கலையில்,
நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையே Marshmallow டெஸ்ட். Marshmallow என்பது ஒரு
இனிப்பான தின்பண்டம்.
தனது செயல்பாட்டிற்கு, ஒரு வகுப்பறையில், நர்சரி பள்ளி மாணவர்களை அவர்
திரட்டினார். வகுப்பின் ஆசிரியர் அந்தக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அந்த
தின்பண்டத்தை வழங்கினார். தின்பண்டங்களைப் பெற்ற குழந்தைகளிடம் ஒரு
நிபந்தனை விதிக்கப்பட்டது. அதாவது, வகுப்பின் ஆசிரியை வெளியே சென்று ஒரு
சிறு வேலையை முடித்துவிட்டு வருவார். அதுவரை, அத்தின்பண்டத்தை குழந்தைகள்
உண்ணலாம் அல்லது ஆசிரியர் வரும்வரை காத்திருக்கலாம். காத்திருக்கும்
குழந்தைகளுக்கு, ஆசிரியர் வந்தபின், கூடுதலாக இன்னொரு தின்பண்டம்
வழங்கப்படும் என்பதே அந்த நிபந்தனை.
ஆசிரியர் வெளியில் சென்று திரும்பிய பின்னர், குழந்தைகளைப் பார்த்தார்.
சில குழந்தைகள் தின்று முடித்திருந்தன. சில குழந்தைகளோ, பொறுமையாக
காத்திருந்தன.
காத்திருந்த குழந்தைகளை, வளர்ந்து, கல்லூரிப் படிப்பை முடித்து,
வேலைக்கு சென்று பணிபுரியும் காலம் வரை, வால்டர் மிஸ்செல் கண்காணித்து
வந்தார். சிறுவயதில், அந்த வகுப்பறையில், தின்பண்டத்தை உண்ணாமல்
வைத்திருந்து, காத்திருந்த குழந்தைகள், மேல்படிப்பில் சிறந்து
விளங்கியதோடு, நல்ல பணிவாய்ப்புகளைப் பெற்று, ஆரோக்கியமான உடல்நலத்தைக்
கொண்டிருந்து, மற்றவர்களுடன் நல்ல உறவையும் பேணி வந்தார்கள் என்பதை அவர்
கண்டறிந்தார்.
கல்லூரி வாழ்வில் நுழைந்தவுடன், ஒரு புதிய சுதந்திரமான உலகை, இளைஞர்கள்
உணர்கிறார்கள். கல்லூரி வாழ்க்கை என்பதே, சந்தோஷமாக ஆடி-பாடி திரிந்து,
இன்பமாக இருப்பதற்குத்தான் என்றும், படிப்பது மற்றும் வகுப்பறை
நடவடிக்கைகளில் பங்கு கொள்வது அவ்வளவு முக்கியமற்றது என்றும் அவர்கள்
நினைத்துக் கொள்கிறார்கள். இதன்மூலம், அவர்களின் தங்களின் எதிர்கால மற்றும்
நீண்டகால நலனை பணயம் வைக்கிறார்கள். அவர்களால், தங்களின் மனஉணர்ச்சிகளை
கட்டுப்படுத்த முடிவதில்லை. குறுகியகால சந்தோஷங்களுக்காக, நீண்டகால நன்மையை
தொலைக்கின்றனர்.
எனவே, ஒவ்வொரு மாணவரும், எப்போதுமே கட்டுப்பாட்டோடு இருக்கப்
பழகிக்கொள்ள வேண்டும். இன்னொரு கூடுதல் தின்பண்டத்திற்கு காத்திருக்கும்
பண்பானது, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்தல் மற்றும் நேர்மறையாக
இருத்தல் ஆகிய குணநலன்களை குறிக்கின்றன.
நீங்கள் உங்களுக்குள் நம்பிக்கை வைக்கவில்லையெனில், உங்களுக்கு நல்லது
நடக்கும் என்று நம்பவில்லையெனில், உங்களின் வாழ்வில் எதிர்மறை விளைவுகளே
ஏற்படும். எதிர்மறை எண்ணங்களை தன்னுள் வளர்த்துக் கொண்டவர்கள், வெற்றிக்கான
வாய்ப்புகள், தங்கள் கதவுகளை தட்டும்போது, அதை கவனிக்க தவறிவிடுவார்கள்.
எனவே, அவசரப் புத்தியை கைவிடுங்கள். தேவையற்ற கோபம் மற்றும்
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். பொறுமையையும், நேர்மறை எண்ணத்தையும்
மேம்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக, வெற்றி உங்களைத் தேடிவரும்.
No comments:
Post a Comment