"பொறியியல் கல்லூரிகளில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவியர்
சேர்வதற்கான, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம்
கோர்ட்டில், தமிழக அரசு, மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த
வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்" என,
உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று,
மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி பேசுகையில், "பொறியியல் கல்லூரிகளில்,
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள் சேர, குறைந்தபட்ச தகுதி
மதிப்பெண்களாக, 35 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதை தற்போது, 40
சதவீதமாக, ஏ.ஐ.சி.டி.இ., உயர்த்தியுள்ளது. இதனால், அந்த பிரிவு
மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த பிரச்னையில், தமிழக அரசு என்ன
செய்யப் போகிறது?&'&' என, கேள்வி எழுப்பினார்.
இதற்கு, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்: பொறியியல்
சேர்க்கையில், பொது பிரிவினர், 50 சதவீத மதிப் பெண்களும், இட ஒதுக்கீட்டின்
கீழ் வருபவர்கள், 45 சதவீத மதிப் பெண்களும், பிளஸ் 2 பாடங்களில்
பெற்றிருக்க வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்தது.
தமிழகத்தை பொறுத்தவரை, பொது பிரிவு மாணவ, மாணவியர், பொறியியல்
படிப்புகளில் சேர, 50 சதவீத மதிப்பெண்களும்; பி.சி., பிரிவினர், 45
சதவீதமும்; எம்.பி.சி., பிரிவினர், 40 சதவீதமும்; எஸ்.சி., - எஸ்.டி.,
மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியர், 35 சதவீத
மதிப்பெண்களும், பிளஸ் 2வில், குறிப்பிட்ட பாடங்களில் பெற்றிருக்க வேண்டும்
என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு, தமிழகத்திற்கு பொருந்தாது என, அறிவுறுத்தக்
கோரி, பிரதமரிடம், முதல்வர் வலியுறுத்தினார். ஆனால், அந்த கோரிக்கை மனு
மீது, மத்திய அரசு எவ்வித பதிலையும் அளிக்காததால், சென்னை, ஐகோர்ட்டில்,
தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கிலும், மேல் முறையீடு செய்த வழக்கிலும், "ஏ.ஐ.சி.டி.இ.,
உத்தரவை, தமிழக அரசு பின்பற்ற வேண்டும்" என, ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதற்கிடையே, பொது பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் அளவை, 45
சதவீதமாகவும், இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களுக்கான மதிப்பெண் அளவை,
40 சதவீதமாகவும், குறைத்து, ஏ.ஐ.சி.டி.இ., ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இது 5 சதவீதம் குறைத்திருந்தாலும், ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும்
அருந்ததியர் சமுதாய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தமிழக
அரசு, சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
அந்த வழக்கில் வரும் தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை
எடுக்கும். இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment