ஒவ்வொரு பள்ளியும், மாணவர்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்க
வேண்டும் என்பது குறித்து, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது .இந்த விவரத்தை
வெளியிடுவதற்கு முன், பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் இருந்து கட்டணத்தை
வசூலித்தால், குறிப்பிட்ட பள்ளியின் அங்கீகாரம், உடனடியாக ரத்து
செய்யப்படும் என, மாவட்ட கல்வி துறை எச்சரித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு, கல்வி கட்டண நிர்ணய சட்டத்தை தமிழக
அரசு அமல்படுத்தியது. இச்சட்டத்தின்படி எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை
ஒவ்வொரு வகுப்பிற்கும், எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கட்டண
நிர்ணய குழு அறிவித்தது.
இச்சட்டத்தை மதிக்காத பல பள்ளிகள், வழக்கம்போல் கூடுதல்
கட்டணத்தை வசூலிக்க துவங்கின. அந்த பள்ளிகளுக்கு மெட்ரிக் இயக்ககம்
நோட்டீஸ் அனுப்பி, விசாரணை நடத்தியதோடு சரி, மேல் நடவடிக்கையை எடுக்க
வில்லை. வேறு வழியில்லாமல், பெற்றோர் பள்ளி முன்பு போராட்டங்களை நடத்தியது
தான் மிச்சம்.
இந்நிலையில், வரும் கல்வியாண்டிற்கான புதிய கட்டணத்தை,
நிர்ணயிக்க வேண்டி ஆய்வு பணி நடந்து வருகிறது. புதிய கட்டணம் அறிவிப்பு
வரும் வரை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்தைத் தான்
பள்ளிகள் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு,
சுங்குவார்சத்திரம், தாம்பரம், காஞ்சிபுரம், பெருங்களத்தூர், உத்திரமேரூர்,
ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் மெட்ரிக் பள்ளிகளில், கூடுதல் கட்டணம்
வசூலிக்கப்படுவதாக பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த சுகுணா கூறுகையில், "அரசு
நிர்ணயிக்கும் கட்டணத்தை தான், பள்ளி நிர்வாகம் வசூலிக்க வேண்டும். அப்படி
முடியாது என்றால், பள்ளியை மூட அரசு உத்தரவிடவேண்டும். தெருவுக்கு
தெருவும், கிராமங்கள் தோறும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து
விட்டது. விதிமுறைகளுக்கு கட்டுப்படாத பள்ளிகளை மூடுவதில், தமிழக அரசு
தீவிரம் காட்டவேண்டும்," என்றார்.
பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த மணிமேகலை கூறுகையில், "பள்ளிக்
கட்டணம் நிர்ணய குழு என்பது, கண் துடைப்பாகவே உள்ளது. இதே நிலை
நீடித்தால், பள்ளிகளில் வசூலிக்கப்படும் அடாவடி, கூடுதல் கட்டணத்தை எந்த
காலத்திலும் ஒழிக்க முடியாது. கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு
கிடைக்கும்," என்றார்.
இதுகுறித்து, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் சுந்தரராஜன்
கூறியதாவது: "ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களிடம், எவ்வளவு கட்டணம் வசூலிக்க
வேண்டும் என்பது குறித்து, அரசு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இது
குறித்த முடிவு, சில தினங்களில் வெளியிடப்படும். இந்த கட்டணத்தை அந்தந்த
பள்ளி நோட்டீஸ் போர்டில், பெற்றோர்களுக்கு தெரியும் வகையில் ஒட்டி வைக்க
வேண்டும்.
இதன் விவரம் இணைய தளம் மூலமாகவும், பெற்றோர் தெரிந்து
கொள்ளலாம். இந்த விவரத்தை அரசு வெளியிடுவதற்கு முன், பள்ளி நிர்வாகம்
பெற்றோர்களிடம் இருந்து, கட்டணத்தை வசூலிக்ககூடாது. மீறி வசூலிப்பது தெரிய
வந்தால், பள்ளிகளின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்து விடுவோம்."
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment