"அங்கீகாரம் பெறாத 2,000 தனியார் பள்ளிகளை மூட மாட்டோம். மாணவர்களின்
நலன் பாதிக்கக் கூடாது என்பதால், சம்பந்தப்பட்ட பள்ளிகள், வரும் கல்வி
ஆண்டில், வழக்கம் போல் இயங்கலாம்" என பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
தமிழக அரசு நிர்ணயித்த
குறைந்தபட்ச நில பரப்பளவு இல்லாமல், 2,000 பள்ளிகள் உள்ளன. இந்த
பிரச்னையால், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம்
வழங்கப்படவில்லை. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி, அங்கீகாரம்
இல்லாத பள்ளிகள் இயங்கக் கூடாது. இதனால், வரும், ஜூன் 3ம் தேதி, 2,000
பள்ளிகளும் இயங்குமா, இயங்காதா என, கேள்விக்குறியாக உள்ளது.
இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்,
பதற்றத்தில் இருக்கின்றனர். தனியார் பள்ளிகளின் நில பிரச்னை குறித்து ஆய்வு
செய்து, உரிய முடிவை எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில்,
குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஏற்கனவே ஒரு முறை கூடி, பிரச்னை
குறித்து ஆய்வு செய்தது.
பள்ளி திறப்பதற்கான காலம் நெருங்கி வரும் நிலையில், 2,000 பள்ளிகள்
மீது, நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து, பள்ளி கல்வித்துறை உயர்
அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கடந்த மார்ச், 31ம் தேதிக்குள்,
அங்கீகாரம் பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், பிரச்னை
குறித்து முடிவு எடுக்க, போதிய கால அவகாசம் இல்லை என, பல்வேறு மாநில
அரசுகளும், பள்ளி நிர்வாகங்களும், ஆர்.டி.இ., சட்டத்தை அமல்படுத்தும்
அமைப்பிடம் தெரிவித்தன. இதனால், கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
எனவே, தமிழகத்தில், அங்கீகாரம் பெறாமல் உள்ள பள்ளிகள், மூட வேண்டும்
என்பது அவசியம் இல்லை. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, அந்த பள்ளிகளை
மூட, நடவடிக்கை எடுக்க மாட்டோம். அந்த பள்ளிகள், வரும் ஜூன் மாதம், வழக்கம்
போல் இயங்கலாம். மூன்று மாதத்திற்குள், பள்ளிகளுக்கான இடப் பிரச்னை
குறித்து, ஒரு முடிவை, தமிழக அரசு எடுக்கும்.இவ்வாறு, அந்த அதிகாரி
தெரிவித்தார்.
பள்ளிகளை மூடமாட்டோம் என உயர் அதிகாரி, தெரிவித்தாலும், மாவட்டங்களில்
உள்ள கல்வி அலுவலர்கள், அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு, கடும் நெருக்கடி
கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலர்
நந்தகுமார் கூறியதாவது: உயர் அதிகாரியின் கருத்தை வரவேற்கிறோம். ஆனால்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, கடும்
குடைச்சல் தந்தபடி உள்ளனர். அங்கீகாரம் இல்லை.
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள் இல்லை; குடிநீர் வசதி இல்லை;
கழிவறைகளில், டைல்ஸ் பதிக்கவில்லை என, பல காரணங்களைக் கூறி, பள்ளிகளை மூட,
நெருக்கடி தருகின்றனர்.
இதன் காரணமாக, பல மாவட்டங்களில், பள்ளிகளை, அவர்களாகவே மூடி
வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில், 16ம் தேதி, ஒன்பது நர்சரி பள்ளிகளை,
நிர்வாகிகளே மூடி உள்ளனர். துறையின் உத்தரவை, மாவட்ட அதிகாரிகள் மதித்து
நடக்க வேண்டும். இவ்வாறு நந்தகுமார் கூறினார்.
No comments:
Post a Comment