இன்று ஒவ்வொரு ஆண்டு முடியும் போது பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள்
தங்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை வாய்ப்பு சந்தைக்கு வருகிறார்கள்.
ஆண்டு தோறும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது, புதிய வேலை
வாய்ப்புகளும் உருவாகிறது.
ஆனாலும், வேலை
இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது
தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஒரு தனி நபரின் திறமையைப் பொறுத்த
வேலையில் அமர்வது என்பதும் மிகவும் அரிதாக உள்ளது. ஒரு பட்டதாரிக்கு உரிய
வேலை கிடைக்க முக்கியமான 4 வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் அவர்களுக்கான வேலை
கிடைப்பதை எளிதாக்க முடியும் என்று வேலை வாய்ப்பு அறிஞர்கள்
கூறுகிறார்கள்.
1. தெளிவான இலக்கைத் தேர்ந்தெடுங்கள்
வேலை தேடும் ஒவ்வொருவருக்கும் தெளிவான இலக்கு என்பது
முக்கியமான தேவையாகும். இலக்கு என்றவுடனே மிக உயர்ந்த இலக்காகத்தான் இருக்க
வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். ஒரு தனி நபரின் பலம் மற்றும்
பலவீனங்களின் அடிப்படையில் அவருக்கு ஏற்றபடியான இலக்கைத் தேர்ந்து
எடுப்பதுதான் அவருக்கான பணி வாய்ப்பைப் பெறுவதற்கான முதல் படியாக அமையும்.
உதாரணமாக பிளஸ் 2 தகுதி உடைய ஒருவர் தனக்கேற்ற வேலை
வாய்ப்புகள் என்னென்ன என்பதை அறிய வேண்டும். அதே போல் பி.எஸ்.சி.,
பி.காம்., பி.ஏ., பி.சி.ஏ., போன்ற படிப்பை முடித்தவர்கள் அவர்களுக்கேற்ற
பணி வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன, அவற்றில் எது தனது பலம் மற்றும்
பலவீனங்களுக்கு உட்பட்டு பொருத்தமாக அமையும் என்று ஆராய்ந்து தங்கள்
இலக்கை முடிவு செய்ய வேண்டும்.
2. உங்கள் வேட்கையை துரத்தாதீர்கள்
ஒரு தனி நபர் தனது வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு
விதமான வேட்கை அல்லது தாகத்தை கொண்டிருப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.
எனவே ஒரு தனிப்பட்ட வேட்கையைத் துரத்துவது என்பது அவரது பணி
எதிர்காலத்திற்கான வளமான வாய்ப்பாக அமையாது என்று கூறுகிறார்கள். ஒரு தனி
நபர் அதிகபட்ச நேரம் எந்த வேலையை செய்து கொண்டிருக்கிறாரோ, அதில் அதிக
அனுபவம் மற்றும் வல்லமை ஏற்படுவதால் அது தொடர்புடைய பணியே சிறந்த
எதிர்காலத்தை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.
3. தடைகளை உருவாக்குங்கள்
வேலை தேடும் ஒருவரிடம் இப்படி சொன்னால் கேட்பதற்கு மிகவும்
வேடிக்கையாக இருக்கும். ஆனால், சொல்ல விரும்பும் விஷயம் என்னவென்றால்,
நீங்கள் தேடும் வேலைக்கு சிறப்பு படிப்பு, தனித்திறன் போன்றவை
தேவைப்படும்படியானதாக இருந்து அதனை உங்கள் இலக்காக கொள்வதன் மூலம்
தனிப்பட்ட முறையில் உங்களின் முன்னேற்றம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
உங்கள் திறனை மேம்படுத்துவது, அதிக உயரங்களை எட்டுவது,
ஆரோக்கியமான போட்டியில் முழு முயற்சி மேற்கொள்வது போன்ற பல்வேறு
முன்னேற்ற சிந்தனைகள் இதன் மூலம் தூண்டப்படுவதால் நாம் முன்னேறுவதற்கான
தடைகளை நாமே மேற்கொள்வதும் நமது சிறந்த பணி எதிர்காலத்திற்கான ஒரு வழியாக
இருக்கும் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
4. பயிற்சிகளே உங்கள் வெற்றிக்கு வழிகாட்டி
இன்டர்ன்ஷிப் எனப்படும் பயிற்சிகள் குறித்து பலரும் தவறான
கருத்துகளை கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவை நாம் எதிர்பார்க்காத
அளவிற்கு சிறந்த பணி வாய்ப்புகளை வழங்கும் ஆற்றல் பெற்றவை.
பட்டப் படிப்பை முடிப்பதற்கு முன் சிறந்த இன்டர்ன்ஷிப்
பெற்று அதனுடன் நல்ல மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடிப்பது நமக்கு பணி
வாய்ப்பிற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும். ஒருவேளை நாம் இன்டர்ன்ஷிப்
பெற்ற நிறுவனத்தில் நமக்கு வேலை கிடைக்காவிட்டாலும் கூட அது பிற
நிறுவனங்களால் சிறந்த வாய்ப்பாக கருதப்பட்டு நமது பணி வாய்ப்புகளை
அதிகரிக்கவே செய்யும்.
சிறந்த பணி வாய்ப்பை நீங்கள் விரைவில் பெற்றிட வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment