தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் பல்வேறு தில்லுமுல்லுகளை
தடுக்கும் வகையில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அடையாள
அட்டை வழங்கி, அவர்களின் முழுமையான விவரங்களை, இணையதளத்தில் வெளியிட, அண்ணா
பல்கலை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, ஓரிரு நாளில் நடக்க உள்ள,
"சிண்டிகேட்" கூட்டத்தில், ஒப்புதல் பெறவும், பல்கலை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், 538 பொறியியல்
கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், பல கல்லூரிகளில், தகுதியான
ஆசிரியர்கள், பணி செய்வதில்லை. எம்.இ., படித்தவர்கள் தான், பி.இ.,
வகுப்பிற்கு பாடம் நடத்த வேண்டும். ஆனால், பி.இ., முடித்தவர்களுக்கு,
குறைந்த சம்பளம் வழங்கி, மாணவர்களுக்கு, வகுப்பு எடுக்க வைக்கின்றனர்.
பல்கலை குழு, திடீரென ஆய்வுக்கு வந்தால், வேறு கல்லூரிகளில் பணிபுரியும்
ஆசிரியர்களை, தங்களது கல்லூரிக்கு வரவைத்து, போலி ஆவணங்களை தயார் செய்து,
ஏமாற்றி விடுகின்றனர்.
பி.எட்., கல்லூரிகளிலும், இந்த தில்லுமுல்லுகள் தான் நடந்து வருகின்றன.
ஆனால், இதுவரை, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், அண்ணா பல்கலை,
தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
ஆசிரியர்களுக்கு, நவீன அடையாள அட்டையை வழங்க உள்ளது.
சாதாரண அடையாள அட்டை தானே, இதில் என்ன இருக்கப்போகிறது என நினைத்தால்
தவறு. ஏனெனில், ஒரு ஆசிரியரைப் பற்றிய முழு ஜாதகத்தையும் சேகரித்து, அதை,
அப்படியே, இணையதளத்தில் வெளியிட, பல்கலை முடிவு செய்துள்ளது.
பெயர், முகவரி, கல்வித் தகுதி, எந்த ஆண்டுகளில், என்னென்ன பட்டங்களை
பெற்றார், எந்த கல்லூரியில் பணி புரிகிறார், அவரது பாஸ்போர்ட் எண், பான்
எண், மொபைல் எண், வீட்டு தொலைபேசி எண் என, பல்வேறு விவரங்கள் நீள்கின்றன.
இவ்வளவையும் தொகுத்து, பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
ஒவ்வொரு அடையாள அட்டைக்கும், ஒரு எண் வழங்கப்படும். இந்த எண்ணை,
இணையதளத்தில் பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் முழு ஜாதகத்தையும்
பார்த்து, தெரிந்து கொள்ளலாம். எனவே, ஒரே ஆசிரியர், வேறு கல்லூரிகளில்
பணியாற்ற முடியாது.
பல்கலை குழுவினர், ஆய்வுக்கு வரும்போது, வேறு கல்லூரி ஆசிரியர்களை,
வரவைத்து, ஏமாற்றவும் முடியாது. ஏனெனில், ஆய்வுக் குழுவினர், இணையதளத்தில்
உள்ள விவரங்களை சரிபார்த்துவிட்டுத் தான், கல்லூரிக்குச் செல்வர்.
அதேபோல், ஒரே நபர், வெவ்வேறு கல்லூரிகளில் வேலை செய்தால், அதை,
கம்ப்யூட்டர் காட்டிக் கொடுக்கும் வகையிலும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வாரத்தில், பல்கலை, "சிண்டிகேட்" கூட்டம் கூடுகிறது. அதில், இந்த
புதிய திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது. அதன் பின், ஆசிரியர்களின்
விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்படும். பல்கலையின் இந்த
அதிரடி நடவடிக்கை, தனியார் கல்லூரிகளுக்கு, கிடுக்கிப்பிடியாக இருக்கும்.
No comments:
Post a Comment