வள்ளியூரில் நடந்து சென்ற பெண்ணிடம் பள்ளி மாணவர்கள் செயினை
பறிக்க முயன்ற சம்பவத்தில் பள்ளியில் போலீசார் விசாரணை மேற்கொண்டதின்
எதிரொலியாக அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட சம்பவம் பெறும்
பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து இரண்டு மாணவர்களிடம் போலீசார்
தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வள்ளியூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக
நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம்
மோட்டார் பைக்கில் வரும் மர்ம நபர்கள் விலாசம் கேட்பது போல் அவர்களிடம்
நைசாக பேசி எதிர்பாராத நேரத்தில் அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை
பறித்து செல்லும் சம்பவம் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இதுகுறித்து பல்வேறு புகார்கள் போலீசில் தெரிவிக்கப்பட்டும்
அதில் ஒரு சில புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர். செயின் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்கள்
பெரும்பாலும் இளைஞர்களாகவும், அதுவும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள்
எனவும் விசாரணையில் தெரியவந்தாலும் அவர்களை கைது செய்ய முடியாமல் போலீசார்
திணறி வருகின்றனர். இதனால் வள்ளியூர் பகுதிகளில் நாளுக்கு, நாள் செயின்
பறிப்பு சம்பவம் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று வள்ளியூர் டி.பி., ரோட்டில் காமராஜர்
நகரை சேர்ந்த ராபின்சன் மனைவி செல்வசுந்தரி (33) என்பவர் தெரு நல்லியில்
இருந்து தண்ணீர் எடுத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது
பின்னால் வந்த நான்குபேர் செல்வசுந்தரி அணிந்திருந்த தங்க செயினை பறிக்க
முயன்றுள்ளனர். உடனே சுதாரித்துக் கொண்ட செல்வசுந்தரி அவர்களிடம் இருந்து
தப்பித்து கூச்சலிடவே கும்பலை சேர்ந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம்
குறித்து செல்வசுந்தரி வள்ளியூர் போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஒரு
தெருவிலும் தனியாக வீட்டிலிருந்த பெண்ணிடமும் மர்ம நபர்கள் செயினை பறிக்க
முயன்றுள்ளனர். அப்போது அந்த பெண்மணி சத்தம் போடவே கொள்ளையர்கள்
தப்பியோடிவிட்டனர். ஒரே நாளில் ஒரே பகுதியில் பட்டப்பகலில் இரண்டு
இடங்களில் இந்த செயின்பறிப்பு சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே பெரும்
அதிர்ச்சி மற்றும் பீதியை கிளப்பியுள்ளது.
இச்சம்பவம் குறித்து வள்ளியூர் இன்ஸ்பெக்டர் அஜிகுமார்
மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்
செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அரசு பள்ளி சீருடை
அணிந்திருப்பது தெரியவந்ததால் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த
மாணவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார்
சந்தேகமடைந்தனர். அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட செல்வசுந்தரியை
அழைத்துக் கொண்டு போலீசார் அரசு பள்ளியில் உள்ள மேல்நிலை மாணவர்களை
அணிவகுப்பு நடத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த சோதனையில் இரண்டு மாணவர்கள் மீது அந்த பெண்
சந்தேகம் அடைந்து போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அந்த இருவரையும் போலீசார்
அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் அந்த மாணவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றதில்
மாணவர்களின் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே சாதி பிரச்னை கிளம்பியது. இதனால்
மாணவர்களுக்கு இடையே மோதல் சம்பவம் நடக்க இருப்பதை தடுக்கும் விதமாக மதியம்
12 மணிக்கு மேல் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் எதற்கு
விடுமுறை அளித்தனர் என்ற விபரம் பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியாததால்
குழப்பம் மற்றும் சந்தோஷத்துடன் வீட்டிற்கு சென்றனர்.
ஆனால் திடீரென்று வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு
விடுமுறை அளிக்கப்பட்டது குறித்து விசாரிக்கும் போது முறையான பதில் எதுவும்
தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை
தொடர்பு கொண்டு கேட்ட போது ; வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை
அளிக்கப்பட்டது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து பள்ளி
தலைமையாசிரியருக்கு விளக்கம் கேட்டு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை
எடுக்கப்படுமென தெரிவித்தனர்.
வள்ளியூர் பகுதிகளில் தொடர்ந்து நடந்து வரும் செயின்
வழிப்பறி சம்பவங்களில் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களின்
ஆடம்பர செலவுக்காக இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதனை அறிந்த
போலீசார் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வழக்குப்பதிவு
செய்யாமல், அவர்களை கண்டித்து அறிவுரை வழங்கி விட்டுவிடுவதாலும், தொடர்ந்து
இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாக அரங்கேறி வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment