நான் நன்றாக தூங்கினேன் என்று மனம் துள்ள பேசும் ஒரு நபர், ”ஏப்மா டல்லா இருக்கே?” என்று கேட்டவுடன், தூக்கம் குறைவுப்பா அதான் என்பார் ரொம்ப சோர்ந்து, தூக்கம் குறைந்த நாளில். ஏன் இந்த துள்ளல் மற்றும் சோர்வு? தூக்கம் சார்ந்த நம் மனப்பான்மை இயற்கையை ஒட்டி இயங்காமை தான் என்பதை முதலில் உணர வேண்டும். சரி என்ன செய்யலாம்?
முதலில் தூக்கம் சார்ந்த உங்களிடம் உள்ள கருத்துகளை கொஞ்சம் தள்ளி வையுங்கள்
உடலுக்கு ஆற்றல் எவ்வாறு கைடைக்கிறது? உணவு மூலம் மட்டுமா? உணவு, காற்று, வெப்பம், நீர், விண்/ வானில் உலவும் கோள்கள்/ விண்மீன்கள் (Cosmic Energy) என பலவற்றை கொண்டு இயங்கும் உயிர். தன் இயக்க நிலையான மனமாக செலவு கொள்கிறது.
எவ்வாறு செலவு கொள்கிறது? முதலில் உள்ளுறுப்புகளுக்கு அதாவது இருதயம், நுரையீரல், கிட்னி போன்ற பிறப்பு முதல் இறப்பு வரை இடைவெளி இல்லாமல் இயங்கும் உறுப்புகளுக்கு தான் முதல் செலவு பின்பு பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணம், தொடு உணர்வு (மெய்/ அழுத்தம்) கடைசியாக இவ்வாறு ஐம்புலன்கள் மூலம் நடைபெறும் நிகழ்வுகளை அனுபவங்களாக பதிவு செய்தும் நினைவூட்டியும், ஒப்பிட்டும், பகுத்தும், தொகுத்தும் சிந்தனையாற்றலாக செயல் கொள்ளும் எண்ண ஆற்றலாக மன ஆற்றல் செலவாகிறது.
கொஞ்சம் நினைவுப்படுத்தி பாருங்கள், தூக்கமில்லாத ஒரு பொழுதில் மகிழ்ச்சியான ஒரு தருணத்தில் நீங்கள் உற்சாகமாக நிச்சயம் கொஞ்சம் கூட சோர்வு அறியாமல் செயல் பட்டிருப்பீர். அத்தருணத்திற்கு தூக்கத்தை துறந்ததில் சிறிதும் உங்கள் வருத்தமில்லை. எனவே தூக்கமில்லை என்ற வருத்தம் சிறிதும் வந்திருக்காது. அப்படியே வந்திருந்தாலும் அதை மனதில் பெரிது படுத்தி இருக்கமாட்டீர்கள். சரியா?
சரி தூக்கம் இல்லாமல் வாழ முடியுமா? முடியும். தூக்கமில்லாமல் உற்சாக மனநிலையுடன் பத்து நாட்கள் சாதரண மனிதனால் இருக்க முடியும். முறையான பயிற்சியோடு இன்னும் சில நாட்கள் கூட தூக்கமின்றி இயல்பாக செயல் பட முடியும். யோகிகள் பல ஆண்டுகள் தூக்கமின்றி தவத்தில் இருந்தார்கள் என்பதை கேள்வி பட்டிருப்போம். ஒன்று அதை பொய் என கருதி இருப்போம் இல்லை ஆச்சரியப்பட்டிருப்போம். நிற்க. அது வெகு சாத்தியம். அது ஒரு உயிராற்றல் மேலாண்மை/ ஆளுமை. இன்னும் சிலருக்கு தூக்கமே எனக்கு வருவதில்லை பல ஆண்டுகளாக என்பர்.
மருத்துவர் பரிசோதித்துவிட்டு. “ALL are Normal” இது உங்கள் மனபிரமை என்பார். சொன்னவர் குழம்பி வெளியே வந்துவிடுவார். பலர் தூக்கமின்மையை இரகசியமாக வைத்திருப்பர் வெளியே சொன்னால் கௌரவக்குறைவாக கருதுவர். பலர் இரவு முழுதும் தூங்குவர் ஆனால் தூக்கம் முழுதும் கனவுகள் வந்துக்கொண்டே இருக்கும். காலையில் தலை சற்று பாரமாக இருக்கும். இது சரியான தூக்கம் இல்லை. அதிகப்படியான கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்வெழுச்சிகள் தான் இதற்கு காரணம். தூங்கும் முன் அரை மணி நேரம் இனிமையான அமைதியான நினைவுகளில் மனநிலையில் பழகுங்கள். சீராகும்.
பாவம் செய்தவனுக்கு தூக்கம் வராது என பலர் பவத்தின் வரையறை தெரியாமல் கற்பனையாக கதை விடுவர். உண்மையில் தூக்கம் இன்மையால் உடல் சற்று சோர்வு அடையும் அவர் அவர் மனப்பக்குவத்தை பொருத்து மனதையும் சோர்வு படுத்தலாம்.
அப்போ தூக்கமே வேண்டாமா? நிச்சயம் வேண்டும். அதற்கு முன் உங்களோடு ஓர் ஆய்வு-2 குறிப்பிட்ட கருத்துக்களை நினைவுப்படுத்த விரும்புகிறேன். இம்மனம் ஏதேதோ கருத்துக்களை தன் மீது இயற்கைக்கு முரணாக இப்பிறவியிலோ தன் மூதாதையரின் உயிர் தொடர் வழி பயனாலோ ஏற்படுத்தியுள்ள பதிவாகியுள்ள கருத்துக்களான “நான்” எனும் சூழலுக்கு ஒவ்வாத எண்ணப்போக்குகளே இப்பிரச்சனைகளுக்கு காரணம். இதனால் தான் மனம் தன்னிலையை இயற்கை நிலைக்கு ஒவ்வாமல் கூட்டியும் குறைத்தும் ஒத்த நிலையில் இயங்கமுடியாமல் இடரும் துன்பத்தையும் பெறுகிறது.
முதலில் மனம் அறிவு நிலையில் செயல்பட உணர்ச்சிவயம், அலட்சியம், அறியாமை நீக்கியும் சிந்தனை, சிக்கனம், சீர்த்திருத்தம் என்ற வழி கொண்டும் செயல் கொள்ள வேண்டும்.
தூக்கம்னு சொன்னாலே எனக்கு அதைப்பற்றி யோசிக்க கூட பிடிக்கவில்லை, எரிச்சல் வருகிறது என்பது உணர்ச்சிவயம், தூக்கம் அது வராக்கட்டி போது போ என்பது அலட்சியம். அலட்சியம் ஏற்படக்காரணம் அறியாமை. இதை மூன்றையும் போக்கிக்கொள்வோம்.
தூக்கத்தைப்பற்றி சிந்தித்து, அளவான நிலையில் அவற்றை சீர்த்திருத்திக்கொள்வோம்.
சரி தூக்கம் ஏன் வருகிறது? உடலுயிர் ஆற்றலான மன ஆற்றல் உள்ளுறுப்புகளுக்கும் புலன்/எண்ண ஆற்றலாக செலவு கொள்வதை பார்த்தோம். காலையில் இருந்த ஆற்றல் வெளிப்பாடின் அளவு படிப்படியாக குறைந்து மாலையில் மேலும் குறைந்து இரவில் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆற்றலை மட்டுமே கொண்டிருப்பதால், அது மன இயக்கத்தை தானே நிறுத்துகிறது (Auto Disconnection).
இவ்வேளையில் உடலில்/ மனதில் ஏற்பட்டுள்ள பழுது பார்த்தல் சீர்த்திருத்த வேலைகளை செய்கிறது பேரறிவு. மீண்டும் எண்ண ஆற்றலாக மாறாமல் சேர்க்கப்பட்ட போதுமான மன ஆற்றல் திணிவு பெற்றவுடன் மீண்டும் தானே மனதை இயக்குகிறது (Auto Reconnection) இது தான் விழிப்பு. இது இயற்கையான ஒன்று. அதன் மீது தவறான கருத்துக்களை ஏற்படுத்தி அதுவே தவறான மனப்பான்மைகளாக வளர்த்து உயிரிலே பதிவாக செய்து துன்புறுகிறோம்.
எவ்வாறு இப்பதிவுகளை போக்கிக்கொள்வது? மன ஆற்றல் ஒரு காந்த ஆற்றல் அதாவது உயிரில் இயங்குவதால் ஜீவ காந்த ஆற்றல் என்பதை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். It is a Bio-Magnetic Energy. இதுவே ஜடப்பொருளிலிருந்து வெளிப்படுவது காந்த ஆற்றல் (Magnetic energy). இந்த மன ஆற்றலே தான் எண்ண ஆற்றலாக மாறுகிறது. இந்த எண்ண வெளிப்பாடில் ஏற்படும் அளவுக்கு மிகுந்த விரைவு தான் உயிருக்கு எண்ணத்தை உணர இயலாமை, கட்டுப்படுத்த இயலாமை மற்றும் அதை மடைமாற்ற இயலாமைகளை தருகிறது. இந்த மிகுந்த விரைவை தான் உணர்ச்சிவயம் என்கிறோம். இந்த விரைவு தன்னிலை தடுமாறி பல்வேறு எண்ணங்களை முறையின்றியும் அளவின்றியும் காரணமற்று இணைத்து மோதி விபத்துகள் ஏற்பட்டு அது ஒரு மனச்சிக்கலாக மாறுகிறது. சரி, இவ்வாறு அந்த அனுபவத்தை மன நினைக்கும் போதே எரிச்சலும் பொறுமையற்ற தன்மையும் வருவது ஏன்?
மனம் விரைவாக செயல் கொள்வதை உணர்ச்சிவயம் என்கிறோம். இவ்வாறு விரைவாக செயல்கொள்ளும் மனம் அளவுக்கு அதிகமான உயிராற்றலை பெறுகிறது இதனால் உடல் இயக்கத்திற்குண்டான ஆற்றல் குறைபாடு ஏற்பட்டு உரசல் ஏற்படுகிறது அது வலியாக துன்பமாக மனதில் பதிகிறது. எப்படி Low Voltage வந்தால் எல்லா மின் சாதனங்களும் உரசலும் பழுதும் அடைகிறதோ அது போல். இதனால் தான் அந்த நிலையை நாம் மனதில் நினைவுப்படுத்தும் போது அதே மனவிரைவு பெற்று அதே மனவலி, எரிச்சல், பொறுமையற்ற தன்மை ஏற்படுகிறது. எப்படி ஒரு சிறிய CD/chipல் ஒரு படத்தை பதிவு செய்து மீண்டும் அதை இயக்கும் போது ஒளி/ஒலியாக வருகிறதோ அது போல். ஏனெனில் அதுவும் ஒரு காந்த இயக்கு நீதியின் அடிப்படையிலேயே செயல் படுகிறது.
இந்த மனச்சிக்கல் எல்லோருக்கும் அவரவர் மனப்பக்குவத்தை பொருத்து இருக்கும். இது அதிகமானால் அது தான் ஹிஸ்டீரியா எனப்படும் மனச்சிக்கல் திணிவு மனநிலை இதை மனநோய் என்பது அறியாமையின் வெளிப்பாடு. இதற்கு மனநல மருத்துவர்கள் கலந்தாய்வு முறையிலும் மாத்திரை மூலமும் பயிற்சி அளிப்பார்கள். இது மிதமான தற்காலிக தீர்வை மட்டுமே தரும். காரணம், உங்கள் மனதைப்பற்றி உங்கள் மனதை விட வேறு யாரால் நன்கு அறிய முடியும்.
இன்றைய மருத்துவம் தற்போது ஒரு உண்மையை அறிந்து வருகிறது. எந்த நோய்க்கும் அது உண்டான இடத்திலேயே அதற்குண்டான மருந்து இருக்கிறது என்பதையும் அதுவே பக்கவிளைவுகள் இன்றி நிரந்தர தீர்வை தருகிறது என்பதையும்.
அமைதியான மனதால் ஆயிரம் எண்ணங்களை சீராக கையாள முடியும் ஆனால் விரைவான மனதால் இது சாத்தியம் இல்லை. இங்கு விரைவு என நாம் குறிப்பிடுவது இயற்கையின் விரைவிற்கு மிகுந்து என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
எப்படி போக்கிக்கொள்வது என்பதை சொல்லுவதை விட்டுவிட்டு இவ்வளவு அறுவை தேவையா என நீங்கள் சிந்திக்கலாம். சிக்கல்களை போக்கிக்கொள்ள உயிர் தன் பிரச்சனையை முதலில் உணர வேண்டும். அப்போதான் அதை கட்டுப்படுத்தி மடைமாற்றிக்கொள்ள (போக்கிக்கொள்ள) முடியும். இந்த மூன்று நிலைகளை இன்றை உளவியல் உறுதி செய்திருக்கிறது.
எண்ணத்தால் ஏற்பட்ட இந்த எண்ணங்களை/ கருத்துக்களை/ மனப்பான்மைகளை எண்ணத்தால் போக்கிக்கொள்ள முடியும். கணினியில் தேவையற்றதை Shift+Delete கொடுப்பதைப்போல். ஆனால், எது (இயற்கைக்கு ஒத்த) சீரான / சீரற்ற எண்ணம் எப்படி அறிவது? அல்லது என் சீரான எண்ணத்தில் என்னால் நிலைக்க முடியவில்லை என்கிறீரா?
அப்போ நீங்க CCsetup இடம் விட்டு விடுங்கள் அது தேவையற்றதை தானாக போக்கிவிடும். நம்மிடம் உள்ள CCSETUP எது? கொஞ்ச நேரம் உயிரிடம் நம் மனதை ஒப்படைத்து விட்டு “நான்” தொலைத்து இருங்கள். எங்க உயிர் இருக்கு? உடல் மையத்தில் இருப்பாகி உடல் முழுதும் இயக்கமாக இருக்கிறது. எனவே உடல் முழுதும் பரவும் நம் சுவாசத்தின் மீது மென்மையாக கவனம் வையுங்கள் பின்பு உடல் முழுதும் மனதால் நினைத்து இருங்கள். எத்தனை நிமிடம் அப்படி உங்களால் இருக்கு முடிகிறதோ அத்தனை நிமிடம் இருங்கள். தினமும் பழகுங்கள். நிமிடங்கள் கூட கூட மனதின் அமைதித்தன்மை கூடும். ஆன்ம பலம் பெருகும்.
இப்படி மனதை வைக்கும் போது. நம் மூளை நிரம்பிலிருந்து கால் வரை பல பகுதிகள் இறுக்கம் நீங்கி தளர்வும் சமத்தன்மையும் பெறுவதை உணர்வீர்கள். என்ன இது மாயமா? ஒன்றுமில்லை. உடலுயிர் ஆற்றல் எண்ண ஆற்றலாக வெளியேறுவது குறைவதால் மனவிரைவு குறைந்து சீராகிறது. இதனால் மனம் அமைதி எனும் நிலை பெறுகிறது தன் எண்ணத்தை தானே ஆய்வு செய்யும் பக்குவமும் திடமும் பெறுகிறது. எண்ணம் தெளிவும் வலியும் நிலைத்தன்மை ஓங்கி தவறான மனப்பான்மைகள் மாய்ந்து நல்லாற்றலாக மடைமாறுகிறது. நீண்ட பழக்கத்தில் உள்ள மனப்பான்மைகள் தொடர் அமைதி நிலையில் உணர்தலாலும் தொடர் சங்கர்பத்தாலும் போக்கிக்கொள்ள முடியும்.
இந்த வலிகளை உணர்வது உங்கள் உயிர் தான் அது எல்லா வற்றையும் அறிந்துள்ளது. பதிவாக கொண்டுள்ளது. அந்நிலையில் மனம் ஒடுங்கி சிந்திக்கும் போது அது சீரான அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்யவல்லது. பல வருடமாய் நமக்கு பிடிபடாத ஒன்றை ஒரு நொடியில் புரிபட வைக்கவல்லது.
மனதின் பொறுமை தன்மை தான் ஒருவரின் அறிவின் திறத்தை நிர்ணயிக்கிறது. இதுவே ஆதித துணிவை தரவல்லது. இவ்வாறு உடல் மீது மனம் வைத்து பழகும் போது இனிய பிடித்த பாடல்களை விரும்பியவர்கள் ஒலிக்க விட்டுக்கொள்ளலாம். இவ்வாறு எண்ணத்தால் வந்த இடர் பதிவுகளை எண்ணத்தால் விரைவாக போக்கிக்கொள்ள ஏற்படுத்தப்பட்டு முறையை தியானம் என்பர்.
மேற்கூரியவை தியானத்தின் அடிப்படை நிலை எனலாம். தியானம் மனச்சிக்கல்களை மட்டும் அல்ல உடல் சிக்கல்களையும் போக்கவல்லது. அதன் மகத்துவத்தை மொழியால் விளக்க முடியாது. உணர மட்டுமே முடியும்.
ஆனால் தியானத்தை முறையாக ஒரு குருவிடம் கற்க வேண்டும் புத்தகங்கள் படித்தோ பிறர் சொல்ல கேட்டோ முயல்வது சரியான விளைவை தராது. அது தியானத்தின் மீதான தவறான கருத்தாக மாற வாய்ப்புள்ளது.
நம் அனைவர் மனமும் தூக்கம் சார்ந்து தெளிபெற்று, தெளிவும் வலியும் பெற்று அது நம் உயிரில் இருப்பாகி நம்மை இயல்பாகி இயக்குமாக. நம் அனைவருக்கும் ஆழ்ந்த தளர்ந்த மலர்ந்த கனவுகளற்ற நல்லுறக்கம் ஓங்கட்டும்…
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!,,,
உங்கள் கருத்துக்கள் மேற்காணும் கருத்துக்களை மேலும் சீர்ப்படுத்தலாம்.
அன்புடன்
ச.பிரகாசம்
No comments:
Post a Comment