"சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, மாநில அரசுகளிடம், என்.ஓ.சி., வாங்கத்
தேவையில்லை" என, சி.பி.எஸ்.இ., அறிவித்தித்திருப்பது, தமிழக கல்வித்
துறையை, அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. "இந்த பிரச்னையை, முதல்வரின்
கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்" என கல்வித்துறை அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
தற்போதைய நடைமுறை: சி.பி.எஸ்.இ.,
பள்ளி துவங்க வேண்டும் எனில், மாநில அரசுகளிடம், தடையின்மை சான்று
(என்.ஓ.சி.,) பெற வேண்டும் என்பது, தற்போது கட்டாயமாக உள்ளது. புதிதாக,
சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்க வேண்டும் எனில், முதலில், பள்ளி
கல்வித்துறையில் விண்ணப்பித்து, என்.ஓ.சி., பெற வேண்டும். இதன்பிறகே,
சி.பி.எஸ்.இ., போர்டின் இணைப்பு அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க முடியும்.
தமிழகத்தில், 400க்கும் அதிகமாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி
வருகின்றன. எனினும், புதிய சி.பி.எஸ்.இ., பள்ளிகள், முளைத்தபடி உள்ளன.
கடந்த, இரண்டு ஆண்டுகளில் மட்டும், 200 பள்ளிகளுக்கு, என்.ஓ.சி.,
வழங்கப்பட்டுள்ளது. மேலும், 30க்கும் அதிகமான விண்ணப்பங்கள், பள்ளி கல்வித்
துறையின் பரிசீலனையில் உள்ளன.
இந்நிலையில், "சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, மாநில அரசுகளிடம்,
என்.ஓ.சி., பெறத் தேவையில்லை” என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, அங்கீகாரம் அளிப்பதற்கான குழு, புதிய
திருத்தங்களை அமல்படுத்துவதற்கு, சி.பி.எஸ்.இ.,க்கு பரிந்துரை செய்துள்ளது.
இதனடிப்படையில், கடந்த ஜூன், 28ம் தேதி, சி.பி.எஸ்.இ., போர்டு நிர்வாகக்
குழு கூடி, அங்கீகார குழுவின் பரிந்துரையை ஏற்று, புதிய அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான சுற்றறிக்கை, நாடு முழுவதிலும் உள்ள சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளின் முதல்வர்களுக்கு, கடந்த ஜூலை, 8ம் தேதி, சி.பி.எஸ்.இ.,
அனுப்பியுள்ளது. சி.பி.எஸ்.இ.,யின் இந்த அறிவிப்பு, சி.பி.எஸ்.இ., பள்ளி
நிர்வாகிகள் மத்தியில், குஷியை ஏற்படுத்தியிருந்தாலும், மாநில அரசுகளுக்கு,
"செக்” வைப்பதாக அமைந்துள்ளது.
புதிய அறிவிப்பு விவரம்:
* சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வழிவகை செய்யும் திருத்தம் 3.3 (1), பிரிவு - 2ல், திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
* புதிய விதிமுறையின்படி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவக்குபவர்கள்,
பள்ளிக்கான முன் அனுமதியை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்து
பெற்றிருக்க வேண்டும்.
* மேலும், சி.பி.எஸ்.இ., இணைப்பு அங்கீகாரம் பெற, சி.பி.எஸ்.இ.,க்கு
விண்ணப்பித்திருப்பது குறித்த தகவலையும், அது குறித்த ஆவணங்களையும், மாநில
கல்வித் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
* மாநில அரசுகளிடம் இருந்து, என்.ஓ.சி., பெறுவது கட்டாயமில்லை. ஆனால்,
விண்ணப்ப பரிசீலனையின் போது, குறிப்பிட்ட பள்ளிக்கு, அங்கீகாரம்
வழங்குவதற்கு, ஆட்சேபம் தெரிவித்து, யாராவது, சி.பி.எஸ்.இ.,க்கு கடிதங்களை
அனுப்பினால், மாநில அரசிடம் இருந்து, கண்டிப்பாக என்.ஓ.சி., பெற வேண்டும்.
ஆட்சேபணை வரவில்லை எனில், மாநில அரசுகள் ஆட்சேபிக்கவில்லை என, கருதப்படும்.
ஏற்கனவே, பல்வேறு வகைகளில், மாநில அரசுகளின் அதிகாரங்களை, மத்திய அரசு
பறித்து வருவதாக, தமிழகம் உள்ளிட்ட, பல்வேறு மாநிலங்கள், குற்றம்சாட்டி
வருகின்றன. குறிப்பாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின்
செயல்பாடுகளை, கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், மாநில அரசிடம் இருக்கும் ஒரே ஒரு கடிவாளத்தையும்
பறிக்கும்விதமாக, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டிருப்பது, தமிழக அரசை, அதிர்ச்சி
அடைய வைத்துள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாநில அரசுகளை, ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
அவர்கள் இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், என்.ஓ.சி.,யும் பெறத்தேவையில்லை
என்றால், வரும் காலங்களில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பெருகி, மாநில பாடத்
திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் எண்ணிக்கை தேயும் நிலை ஏற்படலாம்.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"சி.பி.எஸ்.இ.,யிடம் இருந்து, இதுவரை, எங்களுக்கு, எவ்வித தகவலும்
வரவில்லை. என்.ஓ.சி., கட்டாயமில்லை என, தெரிவித்துள்ள போதிலும், மாநில
அரசிடம் இருந்து, முன் அனுமதி பெற வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த பிரச்னையை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்.
முதல்வர், உரிய நடவடிக்கை எடுப்பார்" என தெரிவித்தார்.
No comments:
Post a Comment