பி.எட்., மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியலில், மதிப்பெண்
விவரங்கள் தவறாக அச்சாகி உள்ளன. இதையடுத்து, பல மாவட்டங்களில் இருந்து
வந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல்
மேம்பாட்டு நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல்
கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட,
தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இதில், பி.எட்., படிப்பிற்கான,
தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. 65 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
முடிவுகள், ஆகஸ்ட், 1ம் தேதி வெளியிடப்பட்டு, மதிப்பெண் பட்டியலும்
வழங்கப்பட்டன.
இந்நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியலில்,
150க்கும் மேற்பட்டோருக்கு, பல பாடங்களில், தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு
பதிலாக, "ஏ" (ஆப்சென்ட்) போடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த
மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதுகுறித்து, கல்லூரி
நிர்வாகங்களும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு புகார்
தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மதிப்பெண் பட்டியல் குளறுபடியால் பாதிக்கப்பட்ட பல
மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், திருவல்லிக்கேணி, வெலிங்டன் சீமாட்டி
கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில், கடந்த இரு நாட்களாக குவிந்தனர்.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத மாணவி கூறியதாவது: நான் கடலூரில்
உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் படித்தேன். பி.எட்., இறுதியாண்டு
தேர்வு எழுதியுள்ள பெரும்பாலானோர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு
விண்ணப்பித்துள்ளோம்.
டி.இ.டி., தேர்வு, வரும் 17, 18ம் தேதிகளில் நடக்கிறது. இந்நிலையில்,
என் மதிப்பெண் பட்டியலில் ஒரு பாடத்தில், மதிப்பெண்ணுக்கு பதிலாக, "ஏ" என
அச்சாகி உள்ளது. டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்று, நேர்காணலை சந்திக்கும்
போது, தவறான மதிப்பெண் பட்டியலால், பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.
இப்போதே தவறான மதிப்பெண் பட்டிலை சரி செய்ய, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக துணைவேந்தர்
விஸ்வநாதன் கூறியதாவது: பி.எட்., தேர்வு எழுதியவர்கள், பாட குறியீடுகளை
மாற்றி போட்டதாலும், பாட தேர்வு எண்ணில், கடைசி எண்ணை எழுதாமல்
இருப்பதாலும், இதுபோன்று மதிப்பெண் பட்டியலில் ஆப்சென்ட் வந்துள்ளது.
பி.எட்., தேர்வு எழுதும் நாளைய ஆசிரியர்கள் கூட, இது போன்று பாட
குறியீடுகளை கூட, தவறுதலாக எழுதுவது வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்ட
மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
ஓரிரு நாட்களுக்குள், புதிய மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு விடும்.
இவ்வாறு, விஸ்வநாதன் கூறினார்.
நன்றி :தினமலர்
No comments:
Post a Comment