வேலை வாய்ப்பு பெறத்தக்க பாடங்கள் எனக்கூறி, கல்லூரிகளில், புதிய
பெயர்களில் பல பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. அரசின் அங்கீகாரம் பெறாமல்
வழங்கப்படும், இதுபோன்ற படிப்புகளால், வேலை வாய்ப்பு பெறுவதில்,
இளைஞர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்றைய
காலக்கட்டத்திற்கு ஏற்ப, வேலைவாய்ப்புகள் வழங்கும் பாடப்பிரிவுகள் என,
பி.காம்., - பி.ஏ., - பி.எஸ்சி., உள்ளிட்ட பாடங்களில், புதிய பெயர்களில்
பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பி.காம்.,
படிப்பில், சி.ஏ., - ஹானர்ஸ்; பி.எஸ்சி., தாவரவியல் படிப்பில் பி.எஸ்சி.,
தாவர உயிர் தொழில்நுட்பம்; பி.ஏ., ஆங்கிலம் படிப்பில், பி.ஏ.,ஆங்கிலம்,
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - செயல்பாட்டு ஆங்கிலம் - சிறப்பு ஆங்கிலம்;
எம்.எஸ்சி., வேதியியல் படிப்பில், தொழிற்சாலை ஆசிரியர்களாக தேர்வு
வேதியியல் என,வழங்கப்படுகிறது.
பெயர் மாற்றி வழங்கப்படும் பாடங்களுக்கு, வேலைவாய்ப்பை
அளிக்கும் டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., போன்ற பணியாளர்
தேர்வாணையங்களில், இணை சான்றிதழ் பெற்றால் மட்டுமே, வேலை வாய்ப்பை பெற
முடியும். சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கிய துறையில், "தமிழ்
இலக்கியமும் பண்பாடும்" பாடத்தில், எம்.ஏ.,வில் முதுகலை பட்டப்படிப்பு
வழங்கப்படுகிறது. இந்த படிப்பை, ஆயிரக்கணக்கான மாணவர் முடித்துள்ளனர்.
100க்கும் மேற்பட்டோர், அரசு துறைகளிலும் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், "எம்.ஏ., (தமிழ் இலக்கியம்) பட்டப் படிப்பு,
எம்.ஏ., (தமிழ் இலக்கியமும், பண்பாடும்) என்ற பட்டப் படிப்புக்கு இணையானது
அல்ல" என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ் ஆசிரியர்
தேர்வுகளை, கடந்த மாதம் நடத்திய, டி.ஆர்.பி., இம்முடிவை எடுத்ததால்,
"எம்.ஏ., தமிழ் இலக்கியமும், பண்பாடும்" என்ற முதுகலை பட்டம்
பெற்றவர்களுக்கு, அரசு வேலை கிடைக்கவில்லை. ஏற்கனவே, இப்படிப்பை முடித்து
வேலையில் உள்ளவர்களும், டி.ஆர்.பி., முடிவால் கலக்கம் அடைந்தனர். இதைத்
தொடர்ந்து, சென்னை பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.
புதிய பட்டப் படிப்புகளால் ஏற்படும் நெருக்கடி பற்றி, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர், பாண்டியன் கூறியதாவது:
இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில், புதிய
தலைப்புகளில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. பி.காம்.,பட்டப் படிப்பு, ஐந்து
தலைப்புகளில் வழங்கப்படுகிறது. பி.ஏ., ஆங்கிலம் - பி.ஏ., கணித ஆங்கிலம்
என்ற படிப்புகளும் உள்ளன. இந்த பட்டப் படிப்புகளை முடித்து செல்லும்
மாணவர்களுக்கு, வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
பி.ஏ., கணித ஆங்கிலம், பி.ஏ., ஆங்கிலத்திற்கு இணையானது என,
பாடத்திட்ட குழுவிடம் அனுமதி வாங்கி பின், ஏற்றுக் கொள்ளப்படுகிறது. புதிய
தலைப்புகளில் பட்டப் படிப்புகளை துவங்கும் போது, கல்லூரி நிர்வாகமும்,
பல்கலைக் கழகங்களும், அதற்கான அங்கீகாரத்தை, "இணையானது" என்ற தகுதி
சான்றிதழை பெற வேண்டும். ஆனால், இதை செய்ய தவறுவதால், அப்படிப்புகளில்
சேரும் மாணவர்கள் தான் சிரமப்படுகின்றனர். இவ்வாறு, பாண்டியன் கூறினார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment