டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் கணிதம் பகுதி கடினமாக இருந்ததாக,
தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். எனினும் பொது அறிவு பகுதியில்
இடம்பெற்ற பல கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.
மதுரை மாவட்டத்தில், 286
மையங்களில் இத்தேர்வு நடந்தது. அழைப்பு விடுக்கப்பட்ட 81,706 பேரில்,
10,681 பேர் "ஆப்சென்ட்" ஆகினர். இத்தேர்வு எழுத, பத்தாம் வகுப்பு தேர்ச்சி
தகுதியாக இருந்தாலும், பி.இ., முதுகலை மற்றும் பட்டப் படிப்பு
முடித்தவர்கள் அதிகம் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
கலெக்டர் சுப்ரமணியன் தலைமையில், 35 பறக்கும் படையினர் கண்காணிப்பில்
ஈடுபட்டனர். சில மையங்களில் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டன. தேர்வு
எழுதியவர்கள் கூறியதாவது:
ரேகா: முதுகலை பட்டம் படித்துள்ளேன். பொது தமிழ்
பகுதியில் இடம் பெற்ற கேள்விகள் எளிமையாக இருந்தன. பொது அறிவு பகுதியில்
இடம்பெற்ற அறிவியல், வரலாறு பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளும்
எளிமையாக இருந்தன. கணிதம் பகுதியில் கேள்விகள் கடினமாக இருந்தன.
மணிமேகலை: எம்.எஸ். டபிள்யூ., முடித்து தனியார்
நிறுவனத்தில் வேலை செய்கிறேன். தமிழ் பகுதி எளிதாக இருந்தாலும், செய்யுளில்
நடுவில் இருக்கும் வரிகளை கொடுத்து யார், எழுதிய பாடல் போன்ற கேள்விகள்
கடினமாக இருந்தன. பொது அறிவு பகுதியில் அறிவியல் பகுதியில் கேள்விகள்
எளிதாக இருந்தன,
திவ்யா: பி.காம்., படிக்கிறேன். இது, எனக்கு முதல்
போட்டித் தேர்வு. பொது தமிழில், இலக்கண பகுதியில் இருந்து அதிக கேள்விகள்
இடம் பெற்றன. கணிதம் பகுதியில், விதிகள் மூலம் விடைகாணும் கேள்விகள் அதிகம்
கேட்கப்பட்டன. இதனால், அதிக நேரம் தேவைப்பட்டது. ஆனால், பொது அறிவு
பகுதியில், வரலாறு, அறிவியல் பாடப் பகுதி கேள்விகள் எளிதாக இருந்தன.
கவிதா: கணிதம் பகுதியில் இடம் பெற்ற கேள்விகளுக்கு
விடையளிக்க அதிக நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஒரு மார்க் கேள்விக்கு
தகுந்த கேள்விகளாக இல்லை. ஆங்கிலம் பகுதியில் இடம்பெற்ற கேள்விகளும்
எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இல்லை. கடினமான வார்த்தைகள்
இடம்பெற்றிருந்தன.
சதீஷ்குமார்: பி.இ., படிக்கிறேன். கணிதம் கொஞ்சம் கடினமாக இருந்தது. தமிழில், இலக்கணத்தில் இருந்து அதிகம் கேள்விகள் இடம்பெற்றன, என்றார்.
No comments:
Post a Comment