"மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு, நுழைவுத்
தேர்வு நடத்தக் கூடாது" என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை
எதிர்த்தும், அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தியும், தனியார்
அமைப்பு ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, மேல் முறையீட்டு மனு தாக்கல்
செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., மற்றும்
பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ பட்டப் படிப்புகளுக்கும், மருத்துவ பட்ட
மேற்படிப்புகளுக்கும், "நீட்" எனப்படும், பொது நுழைவுத் தேர்வு நடத்தி,
மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.
"இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்; அரசியல் அமைப்புச் சட்டப்படி,
நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது" என கடந்த மாதம், 19ம் தேதி, சுப்ரீம்
கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அப்போதைய தலைமை நீதிபதி, அல்டமாஸ் கபீர்
மற்றும் நீதிபதி விக்ரம்ஜித் சென் ஆகியோர், நுழைவுத் தேர்வு தேவையில்லை என,
தீர்ப்பு வழங்கினர்.
பெஞ்சில் இடம் பெற்றிருந்த மற்றொரு நீதிபதியான, ஏ.ஆர்.தவே, மாறுபட்ட
தீர்ப்பை அளித்தார். அதில், நுழைவுத் தேர்வு அவசியம் எனவும், "நீட்" தேர்வு
முடிவை மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் போது, அவற்றை ரத்து
செய்திருப்பது தவறு என்றும், அதில் குறிப்பிட்டிருந்தார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து, மத்திய அரசே, மேல் முறையீடு
செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், "சங்கல்ப்" என்ற அரசு சாரா
தொண்டு நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, சீராய்வு மனு தாக்கல்
செய்துள்ளது.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment