தமிழகத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கட்டாய
கல்வி உரிமைச்சட்டம் (ஆர்.டி.இ.,) சுத்தமாக மதிக்கப்படவில்லை என்பது, தகவல்
உரிமைச் சட்டத்தால் அம்பலமாகியுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி
கிடைக்க வழிவகை செய்யும் வகையில், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை,
2009ல் மத்திய அரசு அமல்படுத்தியது. இச்சட்டத்தின் படி, அனைத்து வகை
தனியார் பள்ளிகளிலும், நுழைவு வகுப்புகளின் மொத்த சேர்க்கையில், 25 சதவீதம்
அளவுக்கு, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை மாணவர்களை கட்டணமின்றிச்
சேர்க்க வேண்டும்.
இந்த சட்டத்தைக் கொண்டு வந்த மத்திய அரசு, இதற்கு முறையான
செயல் வடிவம் கொடுக்கவில்லை; முறையான விதிகளையும் வகுக்கவில்லை;
கண்காணிப்புக்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. மாநில அரசின்
கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளிலாவது, இதை ஆய்வு செய்ய அதிகாரிகள் உள்ளனர்.
இங்குள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இதற்கான கண்காணிப்பும் இல்லை.இதன்
காரணமாக, கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.
ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், இது தொடர்பான
பல்வேறு தகவல்களை சி.பி.எஸ்.இ., நிர்வாக அலுவலகத்திலிருந்து தகவல் அறியும்
உரிமை சட்டப்படி வாங்கியுள்ளார். அதில் கிடைத்துள்ள தகவல்கள்,
குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகின்றன. இவர் கோரிய தகவல்களுக்கு, 390
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 128 பள்ளிகள் மட்டுமே, தகவல் கொடுத்துள்ளன.
மொத்தப்பள்ளிகளிலும் சேர்த்து, 25 சதவீத இடஒதுக்கீட்டின்
படி 3055 ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், தற்போது
வெறும் 762 மாணவர்களே சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது 75 சதவீத இடங்களில்
மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. இதில், 81 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்,
இச்சட்டத்தின் படி ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை; 262 சி.பி.எஸ்.இ.,
பள்ளிகள், தகவல் சமர்ப்பிக்கவில்லை.
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ்,
தமிழகத்தில் செயல்படும் ஒன்பது பள்ளிகளில் மட்டுமே (கேந்திரிய வித்யாலயா)
இச்சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
தோல்விக்கு காரணம் என்ன?
ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில்,
"கல்வி அதிகாரிகளுக்கே, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் சேர்க்கை சார்ந்த
விபரங்கள் தெரிவதில்லை; அதனால், மக்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க
வாய்ப்பே இல்லை. ஆய்வு, கண்காணிப்பு, கட்டுப்பாடு எதுவுமே இல்லாமல், இந்த
சட்டத்தை அமல்படுத்தியதே இதன் தோல்விக்கு காரணம்.
தமிழக சி.பி.எஸ்.இ., நிர்வாக அலுவலகத்திலேயே இந்த இட
ஒதுக்கீடு குறித்த எந்த விபரமும் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். இந்த
சட்டத்தின்படி, பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடைமுறைத்த நடவடிக்கை மத்திய,
மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், இதற்காக பொது நல வழக்கு
தொடர்ந்து இதற்கு தீர்வு காண்போம்," என்றார்
No comments:
Post a Comment