தமிழகம் முழுவதும் 14 லட்சம் பேர் பங்கேற்கும், குரூப்-4 தேர்வு நாளை
நடக்கிறது. இதையொட்டி, டி.என்.பி.எஸ்.சி., பல்வேறு, கிடுக்கிப்பிடி
நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதுகுறித்து, தேர்வாணையத்தின்
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: குரூப்-4
தேர்வுக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, 21ம்
தேதி, "வீடியோ கான்பரன்சிங்" வழியில், மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை
நடத்தப்பட்டது. இதில், தீவிரமாக கண்காணிக்க வேண்டிய, தேர்வு மையங்கள்
குறித்து விவாதிக்கப்பட்டது.
சென்னை மாவட்ட தேர்வுக்கூட தலைமை கண்காணிப்பாளர்கள் கூட்டம், நேற்று
நடந்தது. இதில், 332 முதன்மை கண்காணிப்பாளர்களுக்கும், பல்வேறு அறிவுரைகள்
வழங்கப்பட்டன. அனைத்து தேர்வு அறைகளும், ஒளிப்பதிவு செய்யப்படும்.
தேர்வர்கள், தேர்வு நாளன்று, காலை, 10:30 மணி வரை மட்டும், தேர்வு
அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.
தேர்வு முடியும் வரை, தேர்வு அறையை விட்டு, வெளியேற தேர்வர்களை
அனுமதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து
மாவட்டங்களிலும், தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு
தேர்வு மையத்திலும், ஒரு ஆய்வு அலுவலர், பணியில் இருப்பார். இவர், தேர்வு
மைய நடவடிக்கைகள் குறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு, அறிக்கை
அனுப்புவார்.
தேர்வு மையங்களை ஆய்வு செய்ய, துணை கலெக்டர், ஆர்.டி.ஓ., மற்றும்
இவர்களுக்கு இணையான பதவியில் உள்ள அலுவலர்களை உள்ளடக்கிய, பறக்கும் படைகள்
அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான தேர்வு மையங்களை, இணையதள வழியாக, தொடர்ந்து
கண்காணிக்கவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், எந்த மின்னணு
சாதனங்களையும், தேர்வு மையத்திற்கு கொண்டு வரக் கூடாது. மீறுபவர்களின்
விடைத்தாள்கள், செல்லாதவையாக அறிவிக்கப்படுவதுடன், அவர்கள், தொடர்ந்து,
பல்வேறு தேர்வுகள் எழுதவும் தடை விதிக்கப்படும். இவ்வாறு, ஷோபனா
அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment