பள்ளியில் இருந்து இடையில் நிற்பது மற்றும் குழந்தை
திருமணத்தை தடுக்க மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி அளிக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களை
அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். கல்வியில் பின் தங்கியிருந்த நிலையில்
இருந்து, நகர் பகுதிகள் முன்னேறி வந்தாலும், கிராம பகுதிகளில் போதிய
விழிப்புணர்வு இல்லாததால் அப்பகுதியில் உள்ளவர்கள் கல்வி அறிவில் தொடர்ந்து
பின் தங்கியுள்ளனர்.
மாவட்டத்தில், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால், வெளி
மாவட்டம், மாநிலங்ளுக்கு வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள், குழந்தைகளின்
பாதுகாப்புக்காக, அவர்களை தங்களுடன் அழைத்து செல்லும் நிலையுள்ளது. பெண்
குழந்தைகளை அதிகளவில், குழந்தை திருமணத்தில் ஈடுபடுத்துவதும் தொடர்ந்து
வருகிறது.
இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள்
பாதுகாப்பு திட்ட அலுவலர்களுடன் இணைந்து, மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை
திறன் பயிற்சி அளிக்க உள்ளனர்.
இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் சரவணன் கூறியது:
"பள்ளி மாணவர்கள் இடையில் நிற்பது மற்றும் குழந்தை திருமணம்
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மாவட்டத்தில், 80 பள்ளிகளில் குழந்தை
நேய கிராம திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழந்தை நேய கிராமத்திலும் பஞ்சாயத்து தலைவர்
மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், வி.ஏ.ஓ., தன்னார்வ தொண்டு நிறுவனங்களை
சேர்ந்த தலா, 20பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு மாணவர்களிடம் ஒருங்கிணைந்து பழகுவது,
பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது,
மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை கண்டுபிடித்து, அதை தீர்ப்பது குறித்த
பயிற்சிகள் வழங்கப்பட்டது.
மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில், குழந்தை நேய கிராம
திட்டம் செயல்படும், 80 பஞ்சாயத்துகளிலும், பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆலோசனை
கூட்டம் நடத்தப்படுகிறது.
மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் புகார்களை தெரிவிக்க வசதியாக
பஞ்சாயத்து அலுவலங்களுக்கு முன் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு
போதிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள்
பாதுகாப்பு திட்டம் யுனிசெஃப் உதவியுடன், 14 வயது முதல் 18 வயது வரையிலான
மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் இருந்து இடையில் நிற்பது, குழந்தை திருமணத்தை
தடுப்பது, பெண் சிசு கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த, வாழ்க்கை
திறன் பயிற்சி அளிக்க, நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்பயிற்சி முதற்கட்டமாக மாவட்டத்தில் உள்ள 16 மாணவ,
மாணவிகள் விடுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது. அதனை
தொடர்ந்து அனைத்து மாணவ, மாணவிகள் விடுதி மற்றும் இடையில் நின்ற மாணவர்களை
கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து பள்ளியில் சேர்க்கவும், குழந்தை
திருமணத்தை தடுப்பது குறித்தும், வாழ்க்கை திறன் பயிற்சி அளிக்க உள்ளது."
இவ்வாறு கூறினார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment