ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,) ஹால் டிக்கெட்
இணையதளத்தில், "டவுண்லோடு" செய்ய முடியாததால் தேர்வர்கள் சிரமம்
அடைந்துள்ளனர்.
அரசு, தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர்
தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டுக்கான தேர்வு
வரும் 17 மற்றும் 18ம் தேதி நடக்க உள்ளது. மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 87
ஆயிரத்து 851 பேர் இத்தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
இத்தேர்வில், பங்கேற்பதற்கான ஹால் டிக்கெட் www.trb.nic.in என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்வதில் சிரமம் உள்ளது. இதுகுறித்து தேர்வர்கள் சிலர் கூறியதாவது:
"டி.ஆர்.பி., இணையதளத்தில் இரண்டு நாட்களாக ஹால் டிக்கெட்
டவுன்லோடு செய்ய முயற்சி செய்கிறோம்; முடியவில்லை. இணையதள முகப்பில்,
டவுண்லோடு செய்வதற்கான "ஆப்ஷன்" கொடுக்கப்பட்டது. அதை "கிளிக்" செய்தால்,
தமிழ்நாடு அல்லது புதுச்சேரி என்பதில் தமிழ்நாட்டை தேர்வு செய்தோம். அதில்
தேர்வு நாள், நேரம் விபரம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதே பக்கத்தில், முதல்
தாள் அல்லது இரண்டாம் தாளை தேர்வு செய்தால், விண்ணப்ப எண் கேட்கப்பட்டது.
விண்ணப்ப எண்ணை எத்தனை முறை கொடுத்தாலும் அடுத்த பக்கத்துக்கு செல்லவில்லை.
இதனால், ஹால் டிக்கெட் டவுண்லோடு செய்யமுடியவில்லை." இவ்வாறு, அவர்கள்
கூறினார்.
தொடர்ந்து முயற்சி செய்தும் ஹால்டிக்கெட் கிடைக்காததால்,
தங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதா என்ற குழப்பம் தேர்வர்கள்
மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டி.ஆர்.பி., அலுவலர் ஒருவர்
கூறுகையில், "லட்சக்கணக்கான தேர்வர்கள் டவுண்லோடு செய்ய முயன்றதால், இந்த
பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்; தேர்வர்கள் அச்சப்படதேவையில்லை," என்றார்.
ஒரு சில அலுவலர்கள், "ஹால் டிக்கெட் இன்னும்
வெளியிடப்படவில்லை; 8ம் தேதிக்கு மேல் வெளியிடப்படலாம்" என தெரிவித்தனர்.
"தெளிவான அறிவிப்பை டி.ஆர்.பி., உடனடியாக வெளியிடவேண்டும்" என்று
தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment