தமிழகம் முழுவதும் நேற்று, டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் தாள் தேர்வு நடந்தது.
தர்மபுரி மற்றும்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிலர், இத்தேர்வுக்கான வினாத்தாள்களை
தருவதாகவும், ஒரு வினாத்தாளுக்கு, 2 லட்ச ரூபாய் வரை, விலை பேசி
காரிமங்கலம் பகுதியில் தங்கி விற்பனை செய்து வருதாகவும், தர்மபுரி எஸ்.பி.,
ஆஸ்ராகார்க்கிற்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. மோசடியில்
ஈடுபட்ட, டாஸ்மாக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட, ஆறு பேரை போலீசார் கைது
செய்தனர்.
தமிழகம் முழுவதும் டி.இ.டி., முதல் நாள் தேர்வு நேற்று
நடந்தது. இந்த தேர்வில், 2 லட்சத்துக்கு மேற்பட்ட, இடைநிலை ஆசிரியர்கள்
தேர்வு எழுதினர். கடந்த ஒரு வாரமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில்,
டி.இ.டி., தேர்வில் கேட்கப்படும் வினாத்தாள், கிடைப்பதாக, சிலர் ஆசை
வார்த்தை கூறி தேர்வுக்கு தயாரானவர்களையும், அவர்கள் உறவினர்களையும்
ரகசியமாக அணுகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளியை சேர்ந்தவர் அசோக்குமார், 35.
இவரிடம் உத்தனபள்ளி டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக பணிபுரியும்,
கிருஷ்ணகிரி, சாந்தி நகரை சேர்ந்த கணபதி, 39, என்பவர், டி.இ.டி., தகுதி
தேர்வு வினாத்தாள் தருவதாகவும், வினாத்தாள், 5 லட்ச ரூபாய் என
கூறியுள்ளார். மேலும் வினாத்தாளை, 16ம் தேதி தர்மபுரி நான்கு ரோடு அருகே
தருவதாகவும், வினாத்தாளை தரும் போது, ஒரு லட்ச ரூபாயும், தேர்வு முடிந்த
பின், 4 லட்ச ரூபாயையும் தரவேண்டும் என கேட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, தர்மபுரி அருகே, ஒரு லட்ச ரூபாயுடன்
அசோக்குமார் காத்திருந்தார். அப்போது, மேலும் சிலருடன் காரில் வந்த கணபதி,
அசோக்குமாரிடம், ஒரு லட்ச ரூபாயை வாங்கி கொண்டு, சிறிது நேரத்தில்
வினாத்தாளை எடுத்து வருவதாக கூறி சென்றார். ஆனால், அவர்கள் மீண்டும்
வரவில்லை. அதிர்ச்சி அடைந்த அசோக்குமார் தர்மபுரி
எஸ்.பி.,ஆஸ்ராகார்க்கிடம், மோசடி குறித்து தகவல் தெரிவித்தார்.
எஸ்.பி.,உத்தரவை அடுத்து, தனிப்படை டி.எஸ்.பி.,பரமேஸ்வரா மற்றும் போலீசார்,
கணபதி உள்ளிட்டவர்களை தேடினர்.
தர்மபுரி அருகே தனிப்படை போலீஸார் கணபதி, 39, கணபதியின்
மனைவி எஸ்தர், 33, ஓசூர் அடுத்த காமன்தொட்டியை சேர்ந்த கிருஷ்ணப்பா, 42,
ஓசூர் அடுத்த பஸ்தியை சேர்ந்த சந்திரசேகர், 33, பாலக்கோட்டை அடுத்த
ஜக்கசமுத்திரத்தை சேர்ந்த டாஸ்மாக் சேல்ஸ்மேன் அசோகன், 37,
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டு இளையராஜா, 30, ஆகிய, ஆறு பேரை கைது
செய்தனர். விசாரணையில், இளையராஜா குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று,
தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வருவதும், அசோகன்,
கெலமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரிவதும் தெரிந்தது.
இவர்களிடம் இருந்து போலீஸார், 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை
பறிமுதல் செய்தனர். கைதான ஆறு பேரும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
டி.இ.டி.,வினாத்தாள் தருவதாக கூறி மேலும் சிலரிடம் பணம் மோசடி செய்தது
தெரிந்தது. கைப்பற்றப்பட்ட வினாத்தாள்கள் அனைத்தும் போலியானது என்பதும்
தெரிந்தது. இவர்களிடம் இருந்து சிலர், டி.இ.டி., தேர்வுக்கான உண்மையான
வினாத்தாள் என, நம்பி ஒரு வினாத்தாளை, ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்ச
ரூபாய் வரை கொடுத்து வாங்கி சென்றனர்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பலர், பணத்தை
கொடுத்து ஏமாந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதானவர்களிடம்
நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில், இந்த வழக்கில் மேலும் பலர் சிக்க
வாய்ப்பு இருப்பதால், மோசடி கும்பலிடம் வினாத்தாள் வாங்கி, தேர்வுக்கு
சென்றவர்கள், ஏமாந்ததோடு மட்டும் அல்லாமல், வழக்கு விசாரணையை சந்திக்க
வேண்டி வரும் என்ற பீதியில் உள்ளனர்.
ஏமாற்றியது எப்படி?
கைதான ஐந்து பேர், மோசடி செய்த பின்னணி குறித்து பரபரப்பு
தகவல் வெளியாகியுள்ளது. வினாத்தாள் விற்பனை குறித்த தகவல்களை, கிருஷ்ணகிரி
மாவட்ட போலீசார் அலட்சியப்படுத்தி விட்டனர். அதே நேரத்தில், தர்மபுரி
எஸ்.பி., ஆஸ்ராகார்க், சிறப்பு பிரிவு எஸ்.ஐ., இளவரசன் தலைமையில் தனிப்படை
அமைத்து, இந்த வினாத்தாள் மோசடி கும்பலைபிடிக்க உத்தரவிட்டார்.
தனிப்படை போலீசார், இரு நாட்களாக, மோசடி கும்பலை, ரகசியமாக
அவர்களுக்கு தெரியாமல் கண்காணித்துள்ளனர். இந்த கும்பல், தேர்வுக்கு தயாரான
சிலரை அணுகியது.டி.இ.டி., வினாத்தாள் கிடைக்க, 5 லட்சம் ரூபாய் கொடுக்க
வேண்டும்; தேர்வுக்கு முந்தைய நாள் இரவு, அவர்கள் குறிப்பிடும் விடுதி
அல்லது வீட்டுக்கு வந்து, 2 லட்சம் ரூபாய் பணத்துடன், ஒரிஜினல்
சான்றிதழ்களை வழங்க வேண்டும்.
பின், அங்கு, தேர்வில் கேட்கப்படும் வினாக்களை வரிசையாக
கூற, தேர்வு எழுதுபவர்கள் அதை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இரவு
முழுவதும் அந்த வினாக்களுக்கு விடைகளை கண்டறிந்து தேர்வுக்கு தயாராக
வேண்டும். இரவு அங்கேயே சாப்பிட வேண்டும், தேர்வு முடியும் வரை, யாரிடமும்
மொபைல் போனில் தொடர்பு கொள்ள கூடாது. தேர்வில் அந்த கும்பல் குறிப்பிட்ட
வினாக்கள் அப்படியே வந்திருந்தால், மீதி, 3 லட்சம் ரூபாய் பணத்தை
கொடுத்துவிட்டு, ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி செல்லலாம். இவ்வாறு,
கூறியுள்ளனர்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment