ஓசூர் கல்வி மாவட்டத்தில், மாணவர்களின் நினைவாற்றலை
அதிகரிக்கவும், பரபரப்பு, அச்சமின்றி பொதுத்தேர்வுகள் எழுதவும், யோகா
பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஓசூர் கல்வி மாவட்டத்தில், 29 அரசு மேல்நிலைப்பள்ளி, 79
அரசு உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் நடப்பாண்டு, 19 ஆயிரத்து, 568
மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வும், 8,200 மாணவ, மாணவியர், ப்ளஸ் 2
தேர்வும் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், பரபரப்பில்
படித்தவற்றை மறக்கும் நிலையும், அச்சமும் அடைகின்றனர்.
தனியார் பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு,
சிறப்பு யோகா பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில், மாணவர்களளின்
தனித்திறன்கள் வளர்க்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும், சிறப்பு பயிற்சிகள்
வழங்கப்படுவதில்லை.
நடப்பாண்டு முதல், கிருஷ்ணகிரி மாவட்ட கல்வித்துறை
சார்பில், அரசு பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், அச்சம்,
பரபரப்பு இல்லாமல் நினைவாற்றலுடன் பொதுத்தேர்வு எழுதும் வகையில், தன்னார்வு
பயிற்சியாளர்கள் மூலம் யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, ஓசூர் கல்வி மாவட்டத்தில், 20 அரசு உயர்நிலை
மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், தன்னார்வு அமைப்புகள் மூலம், அரசு
பொதுத்தேர்வு எழுதத் தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு, யோகா பயிற்சி
வழங்கப்படுகிறது.
ஓசூர் சானசந்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஒன்பதாம்
வகுப்பு மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவர்களுக்கு, வாரம் மூன்று நாள், ஓசூர்
சிவாமாதையன் ஜீவ யோகா ஜோதிமயம் அறக்கட்டளை சார்பில், யோகா பயிற்சி
வழங்கப்படுகிறது. யோகா மாஸ்டர் கோபாலகிருஷ்ணன், இலவசமாக, மாணவர்களுக்கு
மனதை ஒருமுகப்படுத்த, அமைதி பெறக்கூடிய மற்றும் நினைவாற்றல் பெறக்கூடிய
யோகா பயிற்சிகளை அளித்து வருகிறார்.
யோகா மாஸ்டர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: யோகா என்பது உடல்,
மனம், அறிவு மற்றும் ஆன்மிகம் வளர்ச்சிக்கும் உதவும் கலையாகும். மேலும்,
உடலையும், உள்ளத்தையும் நலத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. பொதுத்தேர்வு
எழுதும் மாணவர்கள், பதட்டம் ஏற்பட்டு, நினைவாற்றலை இழக்கின்றனர்.
அவர்களுக்கு யோகா பயிற்சி மிக முக்கியம்.
தற்போது, யோகா பயிற்சி பெற்ற மாணவர்கள், மனதளவில்
பொதுத்தேர்வுக்கு அச்சமின்றி தயாராகி விட்டனர். யோகா பயிற்சிக்கு செல்லும்
மாணவர்கள், பெற்றோர், பெரியோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உடன் படிக்கும்
நண்பர்களை மதிக்கும் பழக்கம் ஏற்படுகிறது. மன அமைதியால், அவர்களுடைய அன்றாட
பழக்க, வழக்கங்களில் மாற்றம் ஏற்படுகிறது.
குறிப்பாக, பொதுத்தேர்வு எழுதும் எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 1,
ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு, யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்
கூறினார்.
No comments:
Post a Comment