மூடப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை, மீண்டும் திறக்க வேண்டும் என, புளியம்பாக்கம் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில், புளியம்பாக்கம்
ஊராட்சி உள்ளது. இவ்வூராட்சியில் புளியம்பாக்கம், படவேட்டம்மன் பெரிய
மேட்டு காலனி, ஆதிவாசிகள் குடியிருப்பு உள்ளிட்ட துணை கிராமங்கள் உள்ளன.
இப்பகுதி மக்களின் கல்வித் தேவைக்காக, புளியம்பாக்கம் ரயில் இருப்பு பாதை
அருகே, தனியார் நிதி நாடும் பள்ளி உள்ளது.
புளியம்பாக்கம் கிராமத்திற்கும், பள்ளிக்கும் இடையே, 2
கி.மீ., தொலைவு உள்ளதால், படவேட்டம்மன் பெரிய காலனி பகுதியில், கடந்த,
1990ம் ஆண்டு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி துவக்கப்பட்டது. பின்னர்
பள்ளிக்கு கடந்த, 1993-94ம் நிதியாண்டில், இரண்டு வகுப்பறை கொண்ட சொந்தக்
கட்டடத்தை அரசு கட்டிக்கொடுத்தது.
இப்பள்ளி துவக்கத்தில், ஓராசிரியர் பள்ளியாக
துவக்கப்பட்டது. அங்கு பணிபுரிந்த ஆசிரியர் கடந்த, 1995ம் ஆண்டு, பணி
மாறுதலில் சென்றுவிட்டார். அதன்பிறகு அந்த பள்ளிக்கு ஒரு ஆசிரியை
நியமிக்கப்பட்டார். வாலாஜாபாத் - புளியம்பாக்கம் சாலையில் இருந்து பள்ளி
இருக்கும் இடத்திற்கு, 2 கி.மீ., தொலைவு இருப்பதால், அந்த ஆசிரியையும், பணி
மாறுதல் பெற்று சென்று விட்டார்.
அதற்கு பிறகு இப்பள்ளிக்கு எந்த ஆசிரியரும்
நியமிக்கப்படவில்லை. இதனால் பள்ளியை கல்வித் துறை அதிகாரிகளே இழுத்து
மூடிவிட்டனர். இங்கு படித்த மாணவ, மாணவியர்களை அருகில் உள்ள பள்ளிக்கு
மாற்றிவிட்டனர்.
இது குறித்து, படவேட்டம்மன் பெரிய காலனியை சேர்ந்த மக்கள்
கூறியதாவது: தனியார் நிதி நாடும் பள்ளி, ரயில் இருப்பு பாதையையொட்டி
இருப்பதால், சிறுவர்களை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கமாக உள்ளது. பள்ளியை
கிராமத்திற்குள்ளே துவங்கினால் நன்றாக இருக்கும் என, அப்போதைய ஊராட்சி
தலைவர் முயற்சியில், படவேட்டம்மன் பெரிய காலனியில் பள்ளி கொண்டுவரப்பட்டது.
பள்ளி துவக்கும்போது, 30 மாணவர்கள் வரையில் படித்து
வந்தனர். இந்நிலையில், பள்ளி மூடப்பட்டது. இதனால், சிறுவர்கள் பள்ளிக்கு
செல்ல, 2 கி.மீ., தொலைவு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆகையால் மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க, கல்வித் துறை அதிகாரிகள் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஒருவர்
கூறியதாவது: பள்ளி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறைந்ததால், பள்ளி
மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு படித்த மாணவர்கள், அருகில் உள்ள நிதி
நாடும் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இருப்பினும் பள்ளியை மீண்டும்
திறக்க வேண்டும் எனில், அப்பகுதி மக்கள் மாணவர்கள் சேர்க்கைக்கு
உத்திரவாதம் அளித்து, கல்வித்துறை உயரதிகாரிகளை அணுகினால், மீண்டும்
பள்ளியை திறக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment